Winterகாலப்பெண் வரைகிற ஓவியத்தில்
கருநிறத் தீற்றலுக்கான
பொழுது முகிழ்க்கிறது.
பூவசந்தத் தேன் காற்று
விடைபெற்றுப் போயாயிற்று.
வருடும் இளந்தென்றலில்
ஏறியமர்ந்து அழுத்துகிறது
கொடுங்குளிர்.
கோபமுறும் காற்று
சொடுக்கும் சாட்டையில்
கம்பளி காவச் சபிக்கப்படுகிறார்கள்
மனிதர்கள்.
கரையோரத்துப் பறவைகளின்
கானங்கள் தொலைத்த துயரில்
உழன்று உறைகிறது
அழகு நதி.
மனதில் பச்சிலைக் கனவுகள்
இன்னமும் மீதமிருக்க
காலம் பூசும் மஞ்சள் வர்ணத்தை
உலுக்கி உதறுகின்றன
மரங்கள்.
சொந்த மொழி கேளாத்தெருக்கள்
சோர்வாய் ஊருகின்றன
உயிர் நெரிக்கும் கயிறுகளாகி.
வெண்பனி மூட்டத் தெருவின்
தொலைவிலிருந்து வெளிப்படும்
வெள்ளையன் ஒருவன்
எனக்குமானதென
நான் நம்புகிற சிரிப்பை
என் கைப்பூனைக்குட்டிக்கு
சிந்துகிறான்.
துயர் சாலைகளில் தொடர்கின்றன
உயிர்களின் பயணங்கள்.
இவ்வாறாக.....இங்கே
ஒரு வசந்தத்தின் இறப்பு
நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

சாரங்கா தயாநந்தன் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Pin It