ஏழுவண்ணம் ஏந்திவந்த வானவில்லே, நில்லாய்!
Rainbowஇத்தனைநாள் எங்கிருந்தாய்? வாய்திறந்து சொல்லாய்!
பாலைமண்ணில் அத்திப்பூக்கள் பூத்ததுபோல் வந்தாய்!
பருவமழையின் வருகையைநீ முன்னறிந்து கொண்டாய்!

கோடைவெயில் சௌதியிலே ஓய்ந்தகதை சொல்லக்
குடைபிடித்து வந்தனையோ வான்தெருவில் மெல்ல?
வாடையிளங் காற்(று)இனிமேல் வளைகுடாவை அள்ள,
வளைவுவாசல் திறந்தனையோ ‘வணக்கம்!’சொல்லிக் கொள்ள?

எத்தனைநாள் காத்திருந்தும் கார்முகிலைக் காணோம்:
எதிர்ப்படுவாய் நீயெனயாம் ஏங்கிவெந்து போனோம்:
கத்திரியாய்ச் சுட்டெரித்த சௌதிவெயில் எங்கே?
காட்சிதரும் வானவில்லே, வருக!வருக! இங்கே!

தண்ணெனும்காற்(று) எம்மைவந்து தழுவிச்செல்ல வேண்டும்!
தலைவிரித்த கோடைஆட்சி விலகிக்கொள்ள வேண்டும்!
மண்ணிலெங்கும் தென்றலுக்கு வழித்தடங்கள் வேண்டும்!
மாமழையால் புண்களுக்கு ஒத்தடங்கள் வேண்டும்!

அனல்பறக்கும் பகைமைத்தீயின் மீதுவீழும் துளிகள்!
அவற்றிடையே தெரிவதுன்றன் ஏழுவண்ண விழிகள்!
உனதுதோற்றம் உலகமெங்கும் அமைதிக்கான தூது!
உவகைவெள்ளம் பொங்குதுபார், உன்னைக்கண்ட போது!

வானமங்கை, எங்கிருந்து வாங்கினாள் இவ் வில்லை?
வரிந்துபூட்டும் பாணம்இன்னும் ஏன்கிடைக்க வில்லை?...
வானவில்லே, என்னையுன்றன் பாணமாகப் பூட்டு!
வண்டமிழார் வரிகள்என்றும் வல்லதென்று காட்டு!

உன்றன்ஏழு பொன்னிகர்த்த ஒளிநிறங்கள் தம்மை
ஒன்றுகூட்டிச் சுழலவிட்டால் விளையும்அங்கு வெண்மை!
இன்றெமக்குப் புறநிறங்கள் ஏழுஎழுப தேனும்
இடர்ப்படாமல் ஒன்றுபட்டால் வெண்மையன்றோ காணும்?

இப்படியோர் உண்மைதன்னை உணர்த்தும்வான வில்லே!
எப்படிநான் உனக்குரைப்பேன் ‘நன்றி!’யென்னும் சொல்லே?
சொற்படியே மாந்தருள்ளம் தூய‘வெண்மை’ பூண்டு,
துலங்கிடவே அடிக்கடிநீ பாலையிலும் தோன்று!...

தொ.சூசைமிக்கேல் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
Pin It