Loveஒளிவெளியில் உருள்கிறது
இருள்பந்து.
புதிய ஊழியின் அழிவந்தத்தில்
முகிழ்த்திருக்கும் உயிர்களின் இருப்பு
இனியழியா சாசுவதமாகிறது.
வடதிசை வானத்து நட்சத்திரங்களின்
தொட்டோடும் விளையாட்டை
அப்போதேயலர்ந்த செந்தாமரைகள்
ரசிக்கின்றன.
காடழியா நாட்களின் பொன்விழாவில்
வனமோகினிகள் இசைக்கிற கீதங்கள்
காவி இனிக்கிறது காற்று.
சிறகுகளரியப்பட்ட போர்க்கழுகுகள்
மணல்வெளி வனாந்தரங்களில்
தம் இருப்பின் இறுதிமூச்சினை
வெளிச்சுவாசிக்கின்றன.
பறவைகளின் ராஜ்யத்துக் கிரீடம்
ஒரு வயதில் சிறிய
வெண்புறாவுக்குச் சூட்டப்படுகிறது.
பார்க்கும் பேறுற்ற விழிகளெல்லாம்
தமிழ் காணவும்
பேச வாய்த்திட்ட வாய்களெல்லாம்
தமிழ் ஊற்றவும்
கேட்கும் ஆற்றலுடைய செவிகளெல்லாம்
தமிழ் கேட்கவும்
தவியாய்த் தவிக்கின்றன.
வன்முறைகளறியாத உலக இலக்கியங்கள்
உடையுரித்த சொற்களை
தேசப்பிரஷ்டம் செய்துள்ளன.
இவ்வாறான
முரண்களின் ஆழ்
சிகரத்திலிருந்தபடி
ஆண் எனப்படுகின்ற நீ
பெண் எனப்படுகின்ற என்னை
எதுவித காரணங்களும் கருதாது
ப்ரியம் செய்கிறாய்.

சாரங்கா தயாநந்தன் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Pin It