பெருகும் இரைச்சல்; ஆட்கள் பலப்பலர்
அங்கும் இங்கும் 'தடபுட' என்று
அதையும் இதையும் இழுக்கும், உதைக்கும் -
'மிஷின்'களை இயக்கும் கலவை ஓசை -
'ரிதம்'கள், வானக் கூரை 'ட்ராப் டவுன்'
'கார்பன் மோனாக்சைட்' கயறுவரிசையில்
தூக்கிட்டுத் தொங்கும்.
'டூவீலர்' 'த்ரீவீலர்' முதலாய்
துரப்பணத் தளங்கள் தேடிச்செல்லும்
'பலபல வீலர்' வரையுள்ள வண்டிகள்
முனகும் வீறிடும் கத்தும் கனைக்கும் பிளிறும்
ஓசைகள் சங்கமம்; காதுகள் -
பாலியல் வன்முறைக்குப் பலமுறை பலமுறை -
திரும்பத் திரும்ப - பழகிக் கொண்டன.
நடுச்செவி ஓடை வறண்டது.
முரசு தாறுமாறாய்க் கிழிந்தது.
விஸ்வரூபம் எடுத்தது சந்தடி பூதம்,
வெளியும் வீட்டின் உள்ளும்
அண்டம் பிண்டம் அனைத்திலும்.
குட்டி 'அன்சைஸ்' கண்ணாடிப் பையன்
'டிவிடி' மூலமாய் 'ராட்சசன்' ஆகி,
மானசீகமாய் என் புத்தகம் பிடுங்கி,
காதில் இரைச்சல் காய்ச்சியே ஊற்றி,
இழைக்காத தீமைக்குப் பழிவாங்குகிறான்.
திரை அரங்குகள் நூதன நூதன
சப்தப் பெட்டிகள் பொருத்தின.
கதறுதல் இரசிக்கக் காசு அதிகமாய்
அழுது, செல்போன் எரித்த காதாய்
ஆதாரம் இன்றி, 'கேட்கும் சக்தி'யைத்
தாரை வார்த்துத் தா!என
'ஹல்லூசினேஷன்' வழியில் மிரட்டுகின்றன.
’'கிரைண்டர்' சத்தத்தில் நீங்கள் பேசுவது
கேட்கவா கேட்கும்?" - என்று மனையாள்
ஆக்ரோஷம் கொள்கையில்,
இந்தியா டுடே-ஏ.சி. நீல்சன் -ஓ.ஆர்.ஜி.மார்கின் 'பிரத்யேக
சர்வே' வெளிவந்து கவர்ச்சி காட்டும்
இன்றைய இந்தியா இதழ்படபடக்கும்;
அட்டைப் பெண்ணோ அந்த இதழும்
கெட்டுப் போனது தெரியக் காட்டாது
மறைப்பாள்; நமது பண்பாடு.
'சல்ட்ரி'ப் புழுக்கம் நுழைந்து தவழும்
வீடுதோறும் ஆலைமின் விசிறிகள்
ஆங்காரமாய்ச் சுழல்வதால்
'டிவி வால்யூம்' விளிம்பு கடக்கும்.
வழக்கம்போல் அடிக்கடி மின்வெட்டு வருகையில்
அக்கம் பக்கம் பேசும் பேச்சுகள்
துல்லியம் கொள்ளும். அப்பாடா!
நம்மைச் சுற்றிலும் மனிதர் வசிக்கிறார்
என்றே மனது களிநடம் புரியும்.


தேவமைந்தன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
Pin It