பூச்சாண்டி வருவதாக
அன்னை ஊட்டிய
ஒரு பிடிச் சோற்றின்
உயிர்ச்சத்தில்
உதயமானது என் கிராம வாழ்வு

புழுதிக்காற்றின்
மண்வாசனையில்
எத்தனை முறை
நுகர்ந்திருக்கிறேன்
தாய் மண்ணின் சுகந்தத்தை....

மழை நாள் பொழுதுகளில்
தெருவெல்லாம் திரண்டோடும்
அழுக்கு நீரில் கால்நனைத்து
கழுவியிருக்கிறேன் நினைவுகளை....

நிலாச்சோறு
திருட்டு மாங்காய்
சைக்கிள் விபத்து
முதல் காதல்
இன்னும் எத்தனை நினைவுகள்
என் உயிரோடு ஒட்டியபடி....

அத்தனையும் துறந்து
உலக வரைபடத்தில் மட்டுமே
தாய்நாட்டை காணமுடியுமான
ஒரு தேசத்தில் நான்....

பணம் சம்பாதித்துக் கொண்டே
இருக்கிறது
என் உடல்

உயிர் மட்டும்
இன்னும் என் தெருமுனையின்
பனைமரத்தடியில்.....!
ஏழையின் கண்ணீர்

குற்றம் ஏதும்
செய்யாமலே
குறுகுறுக்கிறது
துருப்பிடித்த மனசு

கொஞ்சம் கொஞ்சமாய்
சேமிக்கிறோம்
கனவுகளையும்
சில்லறைகளையும்......

எப்போதும்
எங்களுடன்
ஒட்டி வாழ்வது
வயிற்றுப்பசி மட்டுந்தான்

எங்கள் வாழ்க்கை
வாசலில்
வகை வகையாய்
கோலங்கள்

நிந்தவூர் ஷிப்லி, தென்கிழக்கு பல்கலை, இலங்கை இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Pin It