கிரீடத்தோடே நித்திரிப்பதால்
நுழையவே முடிவதில்லை கனவுக்குள்
மஞ்சம் விட்டிறங்கி
பாதாதிகேசம் பணியும் சிலபோதுகளிலேயே
உள்ளாழ வாய்க்கிறது

தவிரவும்
அரச நினைப்பே ஆட்கொண்டிருப்பதால்
படையூற்றம் கொள்ளலும்
பாராசாரிக்குதிரையேறி பகைமேற்செல்லலும்
வேட்டைப் போதலும்
விதூஷகர்களும் விசுவாசிகளும் நிறைந்த
தர்பார் மண்டபமுமே வருகின்றன கனவாய்

புழுதியில் உருளவும்
பொங்கும் காட்டாற்றுப் புனலாடிக்களிக்கவும்
ஊணாங்கொடி முறுக்கி ஊஞ்சல் பிணைத்தாடவும்
உடைவாளைப்போல் இடைஞ்சலானது வேறொன்றுமில்லை

சாறின் ருசியூறிய முருங்கைக்காயை
சக்கையாய் மென்றுத் துப்புவதும்
இருமுவதும் செறுமுவதும் கூட
இங்கிதக் குறைவெனத் தடுக்கிறது
முந்நேரமும் உடனுறையும் பரிவாரம்

சாமரம் வீசாதொழியும் நற்பொழுதுகளில்
ஆரத்தழுவி உடையவனை சேடி கூடுகையில்
வேட்கைமுந்துறுத்தும் என் பட்டத்துமகிஷியோ
கவச வஸ்திராபரண இத்யாதிகள் மறிக்க
தூரத்தழுவிச் சோர்கிறாள் விரகத்தில்

அதிகாரத்தின் வெக்கையில் உணங்கும் அந்தரங்கத்தில்
ஈரம் கோர்க்கப்போவதில்லை இனியொரு போதும்

வேண்டாமிந்த சனியன்களென்று
கழற்றியெறிய முகூர்த்தம் கணித்தால்
வாரிச் சூடிக்கொள்ளப் பதைப்புடன் காத்திருக்கிறது
உலகமே.

ஆதவன் தீட்சண்யா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
Pin It