1.
கூடு-
சேர்ந்து கட்டினோம்
புல், இலை, தழை
குச்சி குப்பை எல்லாம் சேர்த்து.
அடைகாத்தோம்
இருவரும் சேர்ந்து..
வெளிக்கிளம்பும் குஞ்சுகளின்
சிறகுகளை வெட்ட
எத்தனை கைகள்
எத்தனை காரணங்கள்
கூடு கட்டிய போது எவ்வளவு மகிழ்ச்சி.
எல்லாம் மாறி விட்டது.
இரை தேடி வந்து
எச்சில் வாயில் பரிமாறிக்கொண்டு
சிலந்தி வலையாய்
கட்டிய கூடு சிரிக்கும்
எல்லாம் பார்த்து.

2.

புதை மணலில் மூழ்குவது
நீயும் நானும்

புதை மணல் என்று
தெரிந்தே கால் வைக்கிறோம்
கொஞ்சம் ஈரம்
கொஞ்சம் பிசுபிசுப்பு
இதெல்லாம் கொஞ்ச நேரம்.
கால்கள் மூழ்கும்போது
இடுப்பு அமிழும்போது
தலை ஈரமாகும்போது தெரிகிறது
மூழ்குவது
முத்துக் குளிக்க அல்ல,
மூழ்குவதற்கென்று.
கொஞ்சம் சுதாரித்துக் கொண்டாலும்
தப்பித்துக் கொள்ளலாம்.
இல்லாவிட்டால்
போதிமரம் புதை மணலில்.

3.

இல்லறம்
காதல் கடிதங்கள்
உதட்டு பரிமாற்றங்கள்
இறுகிய அணைப்பில்
மெய் மறக்கும் அனுபவங்கள்
பரிசுகள்
பரிமாற்றங்கள்..

அப்புறம்...

காவி உடை
பவுடர் வாங்கி நாளாச்சு.
பரிசுப் பொருளில் தூசி.
பார்வையில் சர்ச்சை.
பாடத்தில் விசம்.
துறவறம் என்பதும்
பிரிவு என்பதும்
ஆடையில்தானா தொடக்கம்.

அறைக்குள்ளேயும் தனிமை
அறைக்கு வெளியேயும் தனிமை..

4.

தெரு---
நீ,.நான்.
கடைவீதி---
நீ,நான்.
நூலகம்---
நீ, நான்.
அலுவலகம்---
நீ, நான்.
என்னவாயிற்று?

தெரு வேண்டாம்.
நூலகம் வேண்டாம்.
காய்கறி சந்தை வேண்டாம்.
அலுவலகம் வேண்டாம்.

எல்லாம் மறைந்து போகட்டும்.
நீ நிற்க,
நான் நிற்க.
கொஞ்சம் பார்வை
கொஞ்சம் ஏக்கம்.
தனிமையாய் சிரிப்பு.
தனிமையில் தொலைபேசி

என்னவாயிற்று
உனக்கும் எனக்கும்.

5.

கிழிந்து போன கைப்பையைத் தைக்க
வீதிதோறும் கடைகள்.
அறுந்த செருப்பை
உடனே தூக்கி எறிய முடியாது.
தைத்து தைத்துப் போட்டுக் கொள்ளலாம்.
பர்ஸ் வாய் பிளந்து தெரிந்தாலும்
தைத்துக் கொள்ளலாம்.
வளையல்களை ஒட்டிக் கொள்ள
உயர்ந்த பசை உள்ளது.
பிய்ந்த நகத்தைக் ஒட்டக்கூட
அறுவை சிகிச்சை உள்ளது.
"இது எல்லாவற்றையும் சேர்க்கும்-
உடைந்த இதயத்தைத் தவிர"
என்கிறது ஒரு பசை விளம்பரம்.
கணவனுடன் பிணக்கு என்றபோது
"பிரிந்து விடு, போதும் சமரசம்
புறபட்டு வா" என்கிற என் தோழியே
நீ சிநேகிதிதானா.
கைப்பையைக் தைப்பவன் கூட
சில சமயம் காசு கேட்பதில்லை.


6.

ஒற்றைக் கீற்றாய் கண்மை
கால்களை இறுக்கும் சுரிதார்.
பளிச்சென்ற பவுடர்
உதட்டில் சாயம்.
குட்டைத் தலைமயிர்
இடுங்கிய கன்னம்.
நகப்பூச்சு.
ஒல்லியான கவரிங் வளையல்.
சற்றே உயரம் காட்டும் ஹைகீல்ஸ்.
செதுக்கிய புருவம்.

எல்லாம் பழசுதான்
நீதான் புதுசு என்கிறாய்.

7.

அறுபதுக்கு நாற்பது அடி வீடு.
வெளி மூலையில் குப்பைக்கான இடம்
தாள்கள், இலைகள்
மக்காத குப்பை
மக்கும் குப்பை.
நகராட்சிக்காரனுக்குப் போடவென்று
மக்காத குப்பை
மக்கும் குப்பையென
தனித்தனியேப் பொட்டலங்கள்.

பார்த்துப் பேசி
கடிதம் பரிமாறி
நேசம் வளர்த்து
நகராட்சிக்காரனுக்குப் போடும்
மக்காத குப்பைப் பொட்டலத்தில்--
நீ சேகரித்ததும்
நான் கொடுத்ததும்.
நீ கொடுத்ததும்
நான் சேகரித்ததும்.

8

புத்தனே
தியானம் போதும்
எழுந்திரு.
யசோதராவின் கனவுகளில் வந்து போகும் ஆண்களை
விரட்ட வேண்டாமா.
யசோதராவுக்கு கனவுகள் அபூர்வம்.
ஆனால் சமீபமாய் வரும் கனவுகளில்
ஆண்கள் வந்து போகிறார்கள்.
யசோதராவுக்கு தியானம் பழக்கு.
அல்லது கை கோர்த்துக் கொள்.
யசோதராவாகிப் பார் புத்தனே.
உனக்கும் அவள் தெரிவாள்.
அவள் உடம்பை உணர்வாய்.
தியானம் தனி ஒருவனின் நிம்மதிக்காகவா.
எல்லோருக்கும் தான்.
தியானம் என்றால் உலகம்.
புத்தர் என்றாலும் உலகம்.

புத்தனே தியானம் போதும்.

9.

பேசி நாளாகின்றன.
பார்வை கூட
நேருக்கு நேர் இல்லை.
கேள்வி கேட்கும்போது
சுவர் பார்த்து கேள்.
பதில் சொல்லும் போது
வானம் பார்த்துச் சொல்.
மேஜையில் வைக்கப்படும்
உணவில் சூடில்லை.
வார்த்தைகளில் வெப்பம் தொடாமல்
அறைக்குள் நடக்கப் பழகு.
யாரோ உறவினர்கள் வருகிறார்கள்.
கேட் திறக்கும் சப்தம்.
புன்னகை முகமூடியை அணிந்து கொள்.
சிரித்து வரவேற்பு தா.
உறவினர் போன பின்
புன்னகை முகமூடியை கழற்றி எறி.
அடுத்து
பக்கத்துவீட்டுக்காரன் அல்லது தபால்காரன்
வரும் வரை
புன்னகை முகமூடி
இருட்டில் கிடக்கட்டும். 

திருப்பூர் ம . அருணாதேவி இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Pin It