நான் தொலைக்கும் நான்

என் நடைபாதையில்
முன்னும் பின்னுமாய்
ஆகி
எந்த வீதியில் நான் நடக்கையிலும்
நிழலாய் இருந்தென்னை
குற்றம் கண்பதாய்
ஆரம்பிக்கிறது
உங்களின் தத்துவங்கள்.

சுளுக்குப் பிடித்துப் போன
உங்களின் கழுத்தின் பார்வைத்திசையில்,
விதிகளை வரையும் உங்கள்
கரங்களில் கதியில்,
எங்குமே...
சாக்கடை சலசலத்து ஓடுவதாய்
தோன்றுகிறதெனக்கு.
அதுதான் உங்கள் சங்கீதம் எனில்
நிச்சயம் எனக்கது
நிம்மதி தருவதாய் இல்லை.

என் அடையாளங்கள்
உங்களை பிணத்திற்கலையும்
மிருகங்கள் ஆக்குகிறதெனில்

உயிரில் உள்ள இறுதி
மூச்சையெறிந்து,
நாகரிகம் பெறா..
மொழிகளறியா தேசத்தில்
போய் விழுவேன்.

அங்கே
பாதம் தொடும் சடை வளர்த்து
மரப்பீப்பாய்களில் நிறைந்திருக்கும்
மதுவை ஏந்தி
கடைவாய்களில் வழிய
முன்னிருப்பவனின் முகமதில்
உமிழ்ந்து பின்தொடரும்
பொழுதின் இரத்தம் வழிந்து
களைப்புற்று இருக்கையிலே..

மங்கல் வெளிச்சமதில்
அரைகுறையை அவிழ்ந்துப்போட்டாடும்
தடித்த உதடுகள் பொருந்திய
ஒருத்தியை
பிடித்துப் புணர்ந்து ஒரு பிள்ளை
செய்வேன்
“அம்மா” என்னும் சொல் அறியமாலே...

நான் முற்றத்தில் இருக்கிறேன்

அம்மா நான் முற்றத்தில் இருக்கின்றேன்.
மழை கிளறும் மண்வாசனையையோ
இலைகளிடை தெரியும் நிலவினையோ
நான் ரசித்தபடியில்லை.

என் மரணத்திற்கான அழைப்பு
தெரு முடக்குக்கு வந்துவிட்டது.
நாய்களின் குரைப்புகளை தாண்டி
எழப் போகும் ஓரோசையை கேட்டபடியே
நீ உள்ளிருப்பாய்....

எனக்கான உன் ஆயிரம்
நேர்த்திகள் தோற்றுவிட்டதாய்
அப்போது உணராதே...

என் பிறப்பை போலவே
என் வாழ்வும் இப்போது உனக்கு
எனக்கும் வரமாயிருக்க
நேர்ந்ததே..

இருள் கவியும் பொழுதுகளில்
நான் காவி வந்தவைகளை அறியாமலே
நீ பிட்டு அவித்த படியிருப்பாய்.

என்னை சூழ்ந்த உன் கற்பனைகளையும்
காலையில் ஒலித்த கோவில் மணியையும்
அப்பாவின் தேவாரங்களையும் தாண்டியே
நாங்கள் போனோம்.

நேற்று வந்த பொழுதுகள் எமை கவ்வி
நாளை எழுத அழைத்திற்று.
காற்றைப் போலவும், நீரைப்போலவும் நெருப்பைப்
போலவும் எமையுணர்ந்தோம்.

கட்டைகள் கிழித்தறிந்த காயத்தை
ஒரு துணியில் மறைத்த போதுவுன்
சேலைச் சூட்டை மறந்தோம்

கசகச இருட்டினில் உன்னை அழைத்து,
பிட்டைத் தின்றபடியே அழுமுன் கண்களில்
முன் எங்கள் இலட்சியங்கள் கூறி நின்றோம்.

உன் நேர்த்திகள் பலித்ததாய் கொண்டாடும்
பொழுது நேற்று வாய்த்ததுனக்கு,
இன்றிரவும் பிட்டை தின்றபடி சொல்ல
இலட்சியங்கள் எதுவும் என்னிடம் இல்லை
என்றாலும்..

இவரென்றும் அவரென்றும் அறியாதவர்
என்னை உடல் என்று ஆக்கும் போது,
கூச்சலிடாதே, கத்தியழாதே, வெளியே வராதே.
இன்னும் நீ
இன்னொருத்திக்கும் நேர்த்தி
வைக்கவும்
விரதம் இருக்கவும் வேண்டியிருக்கிறது
அம்மா. 

கோசலன் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Pin It