Riverஓடிக்கலக்கும் நதிகளால்
நலங்கள் இல்லை

ஓடிக்கொண்டிருப்பதால்
வளங்கள் இல்லை

கலந்துவிட்டபின்
காணாமற்பாவதற்கா பயணம்?

எங்கேயாவது நின்று
நிதானித்து
திசைமாற வேண்டாமா?
திசைமாற்ற வேண்டாமா?

பயனற்றும்
அர்த்தமற்றும்
பாய்ந்துகொண்டிருப்பதால்
காலத்தின் கையில்
என்ன இருப்பு?

வானம்
பார்த்துக்கொண்டே இருக்கும்

காற்றும்
வீசிக்கொண்டே இருக்கும்

இரவுப்பகல் ஆடையை
உடுத்தி அவிழ்ப்பதில்
ஒன்றுமில்லையே

கிளைவெடித்துக் கைவிரிப்பதும்
கைகாட்டுவதும் அவசியம்
அப்போதுதான் ஈரமாகி
ஏதேனும் முளைக்கும்

காணாமற்போவதற்கா
இந்தக்கண்விழிப்பு?

தேடாமல் தொலைவதற்கா
இந்தத் தீரும்பயணம்?

நந்தவனங்கள்
மிஞ்சட்டும் 

பிச்சினிக்காடு இளங்கோ (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
Pin It