Ladyகுளிக்க ஆயத்தமாகிறாய்...
உன் பின்னல் பிரித்து வீசிய
பட்டுக்குஞ்சம்
மின்னலாய் கீற்றிடும்

உதிர்ந்த மல்லிகைகள்
விண்மீனாய் ஒளிவீசுகின்றன
உன் கூந்தல் பட்டுச் சிதறியதால்

களைந்த உடைகளின் நிறங்கள்
வானவில்லாய்
ஜாலம் காட்டிச் செல்லும்
மேனிவண்ணம் பட்டு
வானமும் வண்ணம்கொண்டது

உன் மேனிபட்டு இடையிறங்கும்
வெண்பூக்கள்
கால்தொட்டு
கவலை மறக்கச் செய்யும்
மாயமென்ன?

நீ தேய்த்துத் தூக்கிவீசிய
மஞ்சள்
கதிரவனுக்கும் ஒளிகொடுத்தது

திலகம்வைத்து
விரல் துடைத்த ஒற்றைத்துணி
அந்திவானமாய்
வெட்கம் கொள்கிறது

ஒரே ஒரு கண்சிமிட்டலில்
ஆயிரம் கண்களைப் படைத்து
அனுப்பிக் கொண்டிருக்கிறாய்
மீன்களின் வழியாய்

ஒற்றைச் சிரிப்புதிர்த்து
வெளியெங்கும் வெண்மையாக்கினாய்
தலைவனுடன் மஞ்சத்தில்
நாணமுற்று...
திரையிட்டு மறைக்கிறாய்
உன் கூந்தல் விரிப்பால்
இரவுகளைத் தந்தபடி

தேவைகளுணர்ந்து
தினம் உன்னை நீராட வைக்கின்றன
உடல் நனைக்கும்
மழைச்சரங்களும் தடநதிகளும்!

***

உன் வருகையின் வருடல்
அணுவையும் மலரச்செய்யும்

ஓரவிழிப் பார்வையில்
அத்தனையும் இமைமூடுகிறது
வெட்கம்போர்த்தி

பிரிவுற்றோம்...
ஆயிரம் கத்திகளை
அனாயசமாக வீசிச்செல்கிறது
புறக்கணிப்பைத் தாங்கிய
உன் ஒற்றைப் பார்வை

வலுவற்றுத் திகைக்கிறது
அநிச்ச இதயம்


செந்தமிழ் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Pin It