நினைப்பதில் பாதியும்
கனவுகளின் மீதியும்
உடைந்து உடைந்து
கரைந்து கொண்டே இருக்கிறது
முன்பனியில் கலந்து...!

பனிமழைச் சாலையில்
நனைந்த பாதங்களுடன்
கரைந்த சுவடுகளுக்குப்பின்னே
தொலைந்த....
தடயங்களைத் தேடி
நீயும் நானும்
ஒவ்வொரு இரவிலும்
ஒரு நடைபயணம்...!

இன்னும்...
கொஞ்சம் நடந்தால்
அந்த மரத்தடி வரும்
அதையும் தாண்டிச்செல்ல
கால்நடைகளும்
கௌதாரிகளும் கொண்ட
ஒரு மழைக்காலப்புல்வெளி...!

அந்த வெளிகடந்து
தொடர்ந்து நட...
கல்லறைகள் தாண்டி
இன்னும் கொஞ்சத் தூரம்தான்
அதோ....
கண்களில் கலங்கரை...
கறுப்பு யுகங்கள் பல கடந்தபின்பு...!

கடலோரப் பாதைவழி
சிறுதூரம் செல்ல
தென்னஞ்சோலை
அதையும்தாண்டி நட
ஆட்காட்டிக்குருவி கத்த...
அடர்ந்த காடுவரும்
மரக்கிளைகளில் இருந்த
குருவிகள் மனிதநடமாட்டம் கண்டு
திடுக்கிட்டு... சிறகடிக்கும்...!

அங்கே...
சிதறிக்கிடக்கும்
உடைந்த
மண்பானைத்துண்டுகள்கலந்த
மண்ணை அள்ளி
கையில் எடுத்துப்பார்
முடிந்த வாழ்வொன்றின்
தடயங்கள் தெரியும்...!

நிற்கும் இடத்திலிருந்து
கொஞ்சம்...
பின்னே திரும்பிப்பார்
பாசியும் புழுதியுமாய்
அசைக்கவே முடியாமல்
இதுதான்...
என் தாத்தாவுக்கு
முந்தையரும்
தாத்தாவும்
அப்பாவும்
நானும்
வாழ்ந்த வீட்டின் அஸ்திவாரம்...!


த.சரீஷ், பாரீஸ் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
Pin It