ஸ்டீபன் ஸ்பீல்பர்க் கனவுகிற
அந்த வகைவகையான
டினோசார்களிடமா
நாம் பிறந்து வந்த
உலகக் கோளத்தை ஒப்படைக்கப் பார்க்கிறீர்கள்,
சொந்தமாகவே அமர்ந்துகொண்ட
சட்டாம் பிள்ளைகளே?

எதுவும் தீங்கு எவருக்கும் நினைக்காத
எங்கள் ஆறு லட்சம் பேர்களில்
இன்னும் நோயுற்று வாழும்
முதிய எச்சங்கள்,*
உங்கள் கண்களை எப்படிக்
கவர முடியும்?
நொந்துபோன அவர்களால்
‘பிக் பிரதர்’ நிகழ்ச்சி
போலுமொரு போலுமொரு பொய்யை
‘நிகழ்த்தி’யும் ‘அழுது அடவுகட்டி’யும்
உலகின் கவனத்தைக் கவரத்தான் முடியுமா?

உங்களின் கொள்ளிவாய் - குறளிப்பிசாசு வேலைகளும்
நாசிச பாசிச அவதார
பேரினவாதத் தூண்டுதல்களும்
சாதி இன மொழி மதவாத
ஆற்றுநீர் - அணைக்கட்டு நுண்பேதப் பாடவேறுபாட்டு#
பிரிப்பு பிளப்புச் சித்து விளையாட்டுகளும்
இன்னும் எத்தனை நாள்களுக்குத்தான்
தொடரப் போகின்றனவோ?
இந்த பிரம்மாண்டமான மண்ணுருண்டையை
டினோசார்களுக்குத் தின்னக் கொடுக்கும்
நாளது வரையிலுமா?

நீங்கள், நானோ-தொழில்நுட்பத்தை,
ரோபோ உருவாக்கங்களை,
விண்வெளி மேய்வுகளை
எங்கள் எதிர்கால நல்வாழ்வுக்காக
எங்கள் பணத்தைச் செலவிட்டு
ஆற்றிவருகிறீர்கள்-என்று
ஊடகப் பிதாமகன்கள்
எவ்வளவுதான் சங்குபிடித்தாலும்,
இன்னும் சாகாத எங்களின் உள்மனது-
அவற்றையெல்லாம் பக்கவாட்டில்
எப்படி எப்படியெல்லாம் நீங்கள்
பயன்படுத்திக் கொள்கிறீர்களோ
-என்று எண்ணியெண்ணியே
மாயத்தான் செய்கிறது.

ஒவ்வொரு முறையும் உங்கள்
திரைப்பட நாட்டாண்மை ஊடகங்கள்
‘ஜூராஸிக் பார்க்’கின் பாகங்களை
எங்கள் வீட்டுக்குள் புகுந்து காட்டும்பொழுது,
அவற்றிலொரு மோசமான தப்பு
எங்கள் கவலை படிந்த
கண்களை உறுத்தி வதைக்கிறது..

ஆம்.. அதில் டைனோசார்களுடன்
மனிதர்களும் காட்டப்படுகிறார்களே
எப்படிச் சாத்தியமாகும்
அது!

********
* இன்றும் ஹீரோஷிமா நாகசாகி-களில் வாழ்கிற முதியோர்கள்.
# அரசியல் நடத்தும் தலைவர்களின் அறிக்கைகளில் உள்ள பிரதிபேதங்கள்.

தேவமைந்தன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
Pin It