கவிதைகள் வர்ணித்த
உன் கொடியிடையில்
பிளாஸ்டிக் குடம்...
அது பெருமைப்பட்ட
என் வைரத் தோளில்
தகரக் குடம்...
தண்ணீர் சுமைகளைத் தூக்கிதான் நம்
காதலுக்கு வித்திட்டோம்...
குழாயடியில் நாம் செய்துகொண்ட
பார்வை பரிமாற்றங்கள்...
என் மடத்தன சேட்டைகளுக்கு
நீ பரிசளித்த புன்முறுவல்கள்...
என
உரங்களைத் தின்று
வளர்ந்த நம் காதல் செடி...

..........................

இன்று...
காலப் பரிணாமத்தில் காணாமல்
போய்விட்ட அந்த குழாயடி...
ஒருவேளை நம் காதல்
பூவாகி, காயாகி, கனியாகி
விதைகளையீன்றிருக்கக்கூடும்...
ஆனால்
மண்ணோடு மண்ணாகி, மக்கி
என் மனத்தின் ஆழத்தில்
ஒரு நிலக்கரித் துண்டாக
பொதிந்து கிடக்கிறது...
புகையினை கக்கும் எப்போதாவது...
அந்த கக்கலில் சில நேரம்
கவிதைகளும் அடங்கிப் போயிருக்கும்...

பீ.தே. இரமேஷ் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
Pin It