பொன்னல்ல.. பொருளல்ல!
ரா விமலன்

Selfish Manமனிதரெல்லாம் மரங்களென ஆகி நின்று
மானுடத்தின் வாசனையை மறந்து போனார்!
புனிதரெல்லாம் தோன்றியது அந்த நாளில்!
புண்ணியங்கள் தொலைந்தனவே நமது வாழ்வில்!
குனிந்ததொரு தலையுடனே குற்றஞ் செய்தோர்
கூனிநின்ற காலமெல்லாம் மறைந்து போச்சு!
கனிந்ததொரு பழந்தானே சுவையை நல்கும்
கல்நெஞ்சக் காரரிடம் குணமா தங்கும்?

தன்வீடு தன்பிள்ளை என்றே மாந்தர்
தரங்கெட்ட சுயநலத்தில் வாழுகின்றார்!
உன்நாடு என்நாடு என்ற பேதம்
உலகமய மாதலிலே மாறிப் போச்சு!
பன்னாட்டுப் பொருளியலின் வளர்ச்சி வேகம்
பாரெங்கும் எழுச்சியினை ஊட்ட லாச்சு!
தென்னாட்டுத் தீந்தமிழும் செம்மொழி யாகி
திசைதோறும் கணினிவழிப் பயண மாச்சு!

ஆனாலும் மனிதரினம் மாற வில்லை;
அடுக்கிவரும் வன்முறைகள் குறைய வில்லை!
ஊனாலும் உயிராலும் அமைந்த வாழ்க்கை
உருக்குலைந்து போவதிலும் பயனே இல்லை!
தேனாகி இனிக்கின்ற இனிய வாழ்வு
திசையறியா மரக்கலமாய்ப் போதல் நன்றோ?
போனாலும் போகட்டும் என்றிருக்க
பொன்னல்ல பொருளல்ல வாழ்க்கை யன்றோ!

ரா விமலன் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Pin It