செங்கல் சுண்ணாம்பு நிரப்பி
காகித கற்றைகளில் என்
பெயர் பரப்பி
உறவு அழைத்து ஒரு
விருந்தில் அதன் பெருமை சொல்லி
வீடு என்று கொண்டாடும்
இது உள்ளே ஒளிந்திருக்கிறதா
எனது இருப்பு!

ஒரு
மழை மாலையில்
மல்லிகை மணத்தில் அவள்
இதழ்வழி சொட்டும் நீர் என்
இமை நுனி தெறிக்க
எல்லாம் இவளேயென
தலை சாய்த்திருந்த
அவள் மடியிலிருக்கிறதா
எனது இருப்பு!

என்
கனவுகளையும் ஆசைகளையும்
விந்து துளியாய் கருவறையில் விதைத்து
நீரூற்றி பின்
நெடும் தொலைவிலிருந்து
தொலைபேசியில் வரும் குரலில்
வாழ்ந்து கொண்டிருக்கும்
அந்த பிம்பத்திடமா இருக்கிறது
எனது இருப்பு!

நீண்ட நெடிய கால கணக்கின்
இறுதி விடை கிடைக்கும் நொடியில்
கருமேகங்களுக்குள் ஒளியும் நட்சத்திரங்களாய்
காணாமல் போகிறது
எனது இருப்பு!

பின்னொரு நாளில் என்
சவக் குழியில்
ஓலை பாய்க்கும்
மூங்கில் கழிகளுக்குமான
வெற்றிடத்தை அது
நிரப்பக் கூடும்.

பாஷா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
Pin It