Lady in Gardenஸ்வேதாவை முதலில் பார்த்தவன்று
அவள் அப்பாவிடம் சண்டையிட்டுக் கொண்டிருந்தாள்
தனக்கு குதிரைபொம்மை வேண்டுமென்று.

அவளுக்குக் கிடைக்காத குதிரை
பின்னென் கானகத்தில்
தனியாய் அலைகையில்
தன் பாட்டியிடம் கதைகேட்க
கந்தக பூமிக்குப்போனவள்
நாட்கள் பல போனபின்
கறுத்துத் திரும்பினாள்

நாங்கள் சந்திக்காத
நாட்கள் குறையத்தொடங்குகையில்
அவளுக்கு
நான் குதிரையானதும்
அவள் தன் உலகின் கதவுகளை
எனக்கு விரியத் திறந்ததும்
நேர் நிகழ்ந்தன.

தரையில் மேகங்கள் ஊர்ந்திட
பூக்கள் பறவைகளென பறந்து கொண்டிருந்த
அவள் உலகத்தில்
தன் மந்திரக்கோல் கொண்டு
அற்புதங்கள் நிகழ்த்தும்
குட்டி தேவதையாகவே அவளிருந்தாள்.

தென்னை மரத்தில்
புலிகள் வாழும்
அவள் கதைகளில்
மனிதர்கள்
மிக எளிய உயிர்களாய் வருவர்.

நிரப்பப்படாத வெற்றிடங்கள்
சிலவற்றை அவள்
எனக்குள் நிரப்பிவிட்டதாய்
நான் உணர்ந்த கணங்களில்
வீடு மாறிப்போனாள் ஸ்வேதா...

சஞ்சலமிக்கதொரு இடைவெளிக்குப்பின்
நேர்ந்த சந்திப்பில்-அவளின்
புதியவனொருவனுக்கான வெறித்தபார்வையை
நான் செரிக்கத்தொடங்குகையில்
பூனைப்பாதம் வைத்து வந்து
முதுகேறிக்குனிந்து முத்தமிட்டாள்.

நூறாயிரம் புரவிகள் பாயும் களமானேன்.

-------------------------------------------
கோடைக்காமம்
------------------------------------------

பின் மதியத்தின்
மோனத்தவத்தில் இருக்கிறது
அணிலாடும் தரு.

நறுமணத்தைலம் பூசி
நீராடிக்கொண்டிருக்கிறாள் ரதி.

தருவின் நிழலெடுத்துப் பருகி
தாபம் தணிக்கிறான் தேவன். 

தூரன் குணா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
Pin It