ஆற்றிலிருந்து
தோண்டப்படுகிறது மணல்
அக்குழியிலேயே அவ்வாற்றை
சமாதியாக்க!

*

வெள்ளி ஒட்டியாணமாய்
ஆறு ஓடிய
எம் ஊரின் தெருவெல்லாம்
தண்ணீருக்காய்
பிளாஸ்டிக் குடங்களின்
தவங்கள் இன்று!

*

கால் நனைத்து
மனம் சில்லிடவைத்த
ஆற்றை இன்று கடக்கையில்
தட்டிவிழ வைக்கிறது - பல் இளிக்கும்
அதன் விலா எலும்புகள்!

*

ஊருக்கே தண்ணீர் கொடுத்த ஆற்றுக்கு
நாக்கு வறண்டு கிடக்கிறது
ஒரு குவளை தண்ணீர் தர யாருமில்லை;
தண்ணீரும் இல்லை!

*

கிராமத்துக்கு செல்லுகையில் எல்லாம்
ஏதாவதொரு மாற்றம் கண்ணில் படும்
ஆனாலும்,
பளேரென இதயத்திலேயே அறையும்
ஆற்றின் ஆழம்!

*

முந்நாட்களில்
தொப்பென குதிக்கையில்
கால் சலசலக்க நடக்கையில்
தவம் கலைந்த
அவசரத்தில் பறந்த கொக்குகள்;
வற்றி நிற்கும் ஆற்றோரம் உலாத்துகையில்
பேர பிள்ளைகளுக்கு
பழைய கதைகள் சொல்லி செல்லக்கூடும்
என்னைப் போலவே!

ப்ரியன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
Pin It