Peopleபுதிய தொடுவானங்கள் நமது
இடது கை ஓரமாய்.
எதற்கு வாழ்கிறோம்
என்பதே கேள்வியாய்.
தேடிவந்து கடன் கொடுத்தவர்கள் இன்று
தேள்கொட்டுதல்களாய்.
யோசித்து வைத்த பதில்கள்
மூளையிலிருந்து
கசிந்து கொண்டே இருக்கும்-
வாய் ஓரமாய்.
தூக்கத்தில் எழுப்பிக் கேட்டாலும்
இன்னாருக்கு இன்ன விளக்கம்
என்ற சாஃப்ட்வேர்களால்
இடம் அடைபட்டதும்
முடம்பட்டதுமான
பழைய ஹார்ட்வேர்கள்.
தேய்ந்தே போனோம்.
"ஓ, இது வாழ்க்கை தானா?"-
ஞானபீடக் கேள்வி.
சமமான கைகள்தாம்
என்றபோதும்
சோழர் காலத்திலிருந்தே
கெளரவம் சூட்டிக்கொண்ட
வலதுகை,
தான் வேறு உடம்பைச் சேர்ந்ததுபோல்
நடிக்கும் அரிதாரம் பூசிய
வேஷம் பார்த்தா
மாய்ந்து போகிறோம்?
இடது கைதான் நாம்-
ஆம், லஞ்சம் வாங்க அவர்கள்
உபயோகிப்பதில் அல்ல.
கொள்கைப் பிடிப்பில்.
மனித நேசத்தில்.

வறட்டுக் கெளரவம்
வலது கைக்கே இருக்கட்டும்.
எதிர்வில் ஒரு நாள்
எம்மைப் போலவேதான்
அதுவும் என்று
உணரும் நாள் வரும்.

தேவமைந்தன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
Pin It