நீல ஆகாயத்தில்
புல்வெளியில் திறக்கிறது ஒரு போர்க்களம்
எங்கோ மலையைக் கீறிக்கொண்டு வழியும்
அருவிக்குத் தலைகுனிகிறது கனத்த கானகம்
எங்கோ பூப்போன்றதொரு சிறுமியின் உறுப்பு
நகங்களால் கிள்ளியெடுக்கப்படுகிறது
எங்கோ எனது தோழி புதியதொரு வீட்டில்
எரிந்துகொண்டிருக்கிறாள்
குவிஆடியில் பீறிடும் ஒளியின் வீச்சு என
எங்கோ பூமியின் தொடையறுத்துப் பாய்கிறது
எமது தோழர்களின் ரத்தம்
எங்கோ தம் குழந்தைகட்கு முலையிட்டுப்
பிட்டாக்கிப் பரிமாறுகிறாள் ஒரு தாய்
எங்கோ மழையின் இடிக்குரல் படிந்து
மக்கிக்கொண்டிருக்கலாம் ஒரு கிராமம்
இங்கே நிதம் ஒரு மனவெளியில்
சிறகுகள் உதிர்க்கிறது எனது பருவஉடல்
- குட்டி ரேவதி