சாரல் தூறிய பொழுதொன்றில்
சருகோசை இசைத்து
sheகொலுசுகள் பாட
விரைந்தோடுகிறாள்
மலங்கழிக்க..

சொட்டுத் துளிகள்
ஒன்றையொன்று பதம்பார்க்க
இலைநுனிகளை ரசிக்க நேரமின்றி
கரமறுந்த மரத்திடுக்கில்
மறைகிறாள்

புலமை நிறைந்த மரக்காடு
சப்தக் கவியெழுத
உறங்கிக் கொண்டிருந்த அச்சத் தன்மை
ரசிக்கத் துவங்குகிறது அவளுக்கு

சேறு விழுங்கிய சொட்டொலி
காது படலத்தை கிழித்தெறிகிறது
மிரட்சியால் கண்கள்
கதவு பூட்டிக் கொள்கிறது

இயற்கை அவளை
அந்நேரத்திலும் ரசிக்கிறது
அங்குல அங்குலமாய்
அவள் அங்கங்களைத்
தொட்டு நுகர்ந்து ருசிக்கிறது.

காடுவழி உட்துளைந்து
மரமெய் விட்டிறங்கி
கதிர்களோ துளிகளோ
அவளை அணைய

கோப தாக்கத்தின்
வெட்கச்சிதறலில்
வெண்ணிலவொன்று
ஆடை மூடி ஓடுகிறது.

- ஆதவா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
Pin It