couple_272கொஞ்சம் கொஞ்சமாய்
சரிந்து முற்றிலும்
விழுந்தே விட்டது
எனக்கான பலவீனங்கள்..

என் சொற்களில்
வலிமையேறியிருக்கிறது
அணுகுமுறை
மாறியிருக்கிறது..

நமக்கிடையேயான
இடைவெளியை
துளித்துளியாய்
அழித்தெடுத்துவிட்டோம்..

கடந்த நிமிடத்திலிருந்து
கொட்டிக் கொண்டிருக்கும்
ஒற்றைச் சொல்லி
எனக்கான பற்றுதலிருக்க..

பதட்டங்களைத் துரத்திவிட்டு
பின் வாசலில்
பதியமிடுகிறேன்
சில விதைகளை..

*****

என் பெருந்துயரின் பாடலை
இன்றிரவு இசைக்கப் போகிறேன்..

இதுவரை கேட்டறியாத
எந்தவித சாயலுமற்ற
அதன் ராகம்
உயிரினை உருக்கக்கூடியதாகவும்
நரம்புகளை சில்லிட செய்வதாகவும்
இருக்கும்..

அந்த பாடலின் வரிகள்
ஒவ்வொன்றிலும்
கடந்த காலச்சுவடுகளும்
நிகழ்கால பதிவுகளும்
செறிந்திருக்கும்..

அந்த பாடலின் இசை
முடிவுறும் நிலையில்
வீணையின் நரம்பொன்று
அறுந்து விழும் ஓசை கேட்கும்
என் இதயத்திலிருந்து..

அந்த ஓசை
பூமி அதிர வானத்தில்
எதிரொலிக்கும்..

பிறகு உலகின்
எந்த மூலையிலும்
துயர்மிகுந்த பாடலிசைக்க
தடைவிதிக்கப்படும்...

*****

வாழ்க்கை என்பது
தெரிந்த மரணம்..
மரணம் என்பது
தெரியாத வாழ்க்கை..

*****

எனது வீட்டிலிருந்த
வாசலும், சன்னலும்
இப்போது
காணாமல் போயிருக்கிறது..

எங்கே தேடியும்
கிடைக்காதிருந்த அதனை
ஒருமுறை
உன் வீட்டிற்கு வந்த போது
கண்டுபிடித்தேன்..

ஒரு இரவில்
என்னியதமும்
காணாமல் போக
உன் வீடு தேடி வந்தேன்
கையில் வைத்து
விளையாடிக் கொண்டிருந்தாய்
என் இதயத்தை..

திருப்பிக் கேட்க விரும்பாமல் நானும்..
திருப்பித் தர தோன்றாமல் நீயும்..

*****

- இசை பிரியா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It