முடிவுறாத
ஒரு பயணத்தின் இடையில்
குகையொன்றில்
கண்மூடி விழிக்கிறேன்.

இமைகளின் சிறையில்
அடைபட்டிருந்த
இருவிழிகள்
விழிப்பிலும்
இருட்டில் மூழ்கி
மூச்சுத் தினறுகின்றன

இருட்போர்வை விலக்கி
வானத்து விண்மீன்களின்
கரம்பிடித்துக்
கரையேறத் தவிக்கையில்
சுழன்றடிக்கும் சூறாவளியாய்
அச்சம் என்னை
அலைக்கழிக்கின்றது

வெளிச்சக் கீற்றின்
துளிகளில்
தாகம் தணிய
நீளும் நாக்கில்
இருட்டரவம்
தீண்டிக் களிக்கின்றது.

வாசலும் வழியுமறியா
குகைக் கோணியில்
சுருட்டப்பட்டு
முடங்கிக் கிடக்கையில்
பாறையில் உயிர்க்கும்
வெண்கோட்டு ஓவியத்தின்
சூரியக் கிரணங்கள்
என்னை
ஆரத்தழுவிக்
கதகதப்பூட்டுகின்றன

- முனைவர் நா.இளங்கோதமிழ்ப் பேராசிரியர், புதுச்சேரி - 8.

Pin It