பாழடைந்த வீட்டில்
காலப்போக்கில் முளைக்கும்
செடி கொடிகளோடு சில செவிகளும்

*
நானொரு இலையுதிர் காலம்
மீண்டும் மீண்டும் உதிர்வதற்காகவே
முளைத்துக் கொள்கிறேன்

*
அதிகமாக பெண்களுக்கு மட்டுமே
ஏன் பேய் பிடிக்கிறது தெரியுமா
அவர்கள் பெரும்பாலும் குடிப்பதில்லை

*
நீ பிரார்த்திக்கா விட்டாலும்
நல்ல கடவுள்
காப்பாற்றுவான்

*
மூச்சிரைக்காமல்
முழுங்க கற்றுத் தரும்
கூட்டுக் குடும்ப தாழ்ப்பாள்

*
அசைக்க மட்டுமல்ல
இசைக்கவும் தெரிந்தவன் தான்
காதல் தலைவன்

*
தூரத்து ரயில் சத்தம்
ஒரு நாள் துக்கமென
ஒரு நாள் ஆர்ப்பரிப்பு

*
புகை நடுவே பாறை காண்கிறேன்
அருவி கனவை
வேறெப்படி ஆரம்பிக்க

*
சித்த பிரமையைக் கவனி
நித்தம் பொழியும் நிலாவும்
நில்லாமல் துளிர்க்கும் சூரியனும்

*
நீர் செய்யச் சொல் மழையிடம்
காகத்துக்கும் தாகம்
தாகத்துக்கும் தாகம்

- கவிஜி

Pin It