வெளிச்சமற்ற கதவுக்குப் பின்
என்ன இருக்கிறதோ
கடவுளும் வேதாளம் சுமக்கும் கற்பனை  

மின் விளக்கு அணைந்தணைந்து
எரியும் கண் மணிக்குள்
அறுபடும் தொடர் மணித் துளிகள்

காற்றில் கணக்கிலடங்கா துளைகள்
காதுக்குள்ளோ கற்பனை துகள்கள்
வயிற்றுக்கும் தொண்டைக்கும் 
உருவமில்லா உருண்டை உருளும் தான் 
 
சொற்கள் நிறைந்த
மௌனத்தில் வெற்றுக் குத்துகள்
திரும்பும் பக்கமெல்லாம்
தன் முகமே தலையற்ற தத்துபித்துகள் 
 
சக மனிதன் புறக்கணிக்கலாம்
சண்டைக்காரனும் கண் கசக்கலாம்
கதவடைத்து ஜன்னலடைக்கும்
ஒதுக்குதல் கவலையில்லை
மானுட பதுக்குதல் தான் கவலையளிக்கும் 
 
எங்கோ இருந்தது இங்கேயும் இருக்கிறது
சித்திரத்தின் மறுபக்கம் நின்று
சத்ரியனை தேடலாம் நாளை 
 
தவம் கலைந்த பின்னும் போதி இருக்கும்
வரம் தேவையில்லை
வன்மம் கரையட்டும் இன்றே
 
ஆம்புலன்ஸ் சத்தம் கேட்குமோ
ஆன்மாவில் சாந்தம் பூக்குமோ
ரிசல்ட்டுக்காக காத்திருப்பவனுக்கு 
ரீங்கரிக்கும் தொண்டையில் கால வண்டின் குரல்  

- கவிஜி 

Pin It