ஜன்னலில்
வந்தமரும் பறவைகளுக்கு
கிண்ணத்தில் நீர் வைப்பது
என் வழக்கம்
வந்து பருகும்போது,
நனையும் இறகால்
ஜன்னல் அருகே காண்கிறேன்
சுவரோவியம்.
அவைகள் பேசும் பாசைகளையும்
கொஞ்சமாய் அறிவேன்..

அப்படித்தான் ஒருமுறை
நிழலுக்காக ஒதுங்கிய ஒருவன்
பரந்த வானத்தைப் பார்ப்பது போல
அந்த பெரும்மரத்தைப் பார்த்ததாகவும்,
பிறகு வெட்டிச் சாய்த்து,
யார் யாரோ எடுத்துச் சென்று விட்டதாகவும்...

யாரோ நிறுத்தி விட்டுச் சென்ற
ஒரு மாட்டு வண்டியின்
சக்கரத்தின் மேல்
அமர்ந்திருக்கும்
அங்கு கூடிழந்த
அவ்விரு பறவைகள்
எனக்குத் தெரிந்த பாசையில்
கதைத்துக் கொண்டிருந்தன.

- தஞ்சாவூர் சாயிராம்

Pin It