முதல் மிடறு பருகும் போது இருக்கும் சுவை
கடைசி மிடறு தேநீரில் இருப்பதில்லை.

முதல் மிடறு
பருகும் போது இருக்கும் மருந்தின் கசப்பு
கடைசி மிடறு
சாற்றில் இருப்பதில்லை.

பருகப் பருக
அமுதம்
விஷத்தின் குணத்தை அடைந்து விடுகிறது.

விஷம்
பருகப் பருக
விடுதலை தருவதால் அமுதமாகி விடுகிறது.

தொடங்கும் போது
இருக்கும் இன்பம்
தொடர்ந்து வருவதில்லை.

தொடங்கும் போது
இருக்கும் துன்பமும்
தொடர்ந்து வருவதில்லை.

விளக்கின் அடியில் உள்ள இருள்வட்டத்தை ரசிக்காதவன்
ஒளிச்சுடரை ரசிப்பதில்லை.

ஒரு மூச்சில் உயிரும்
மறுமூச்சில் மரணமும்
இணைந்து கலந்திருக்கும்
இவ்வாழ்வில்
வீரம் என்பது
வெளியில் இல்லை.

இமைப்பொழுதே
இவ்வாழ்வு.

கடந்து செல்லும் முன் கைப்பற்றி மகிழ
கண்ணீரின்
சுவையறிய வேண்டும்.

- அமீர் அப்பாஸ்

Pin It