கண்ணாடி வேலைப்பாடுகள் கொண்டு
அணிவதற்கு சௌகரியமாய்
அகன்ற கால்கள் கொண்ட
வெள்ளை நிறச் சுடிதார் எனது
பத்து வருடங்களுக்கு முன்னர் வாங்கியபோதும்
புதிதாய் இருக்கிறது என இன்றும்
என் அலுவலகத் தோழியின்
பாராட்டைப் பெற்றது

என் பதினைந்தாம் வயதில் சில நாட்களில்
உதிரப் போக்கின் கறை சுமந்திருக்கிறது
வெளியே சொல்லக்கூடாதென அம்மா எச்சரித்த
நோய் வாய்ப்பட்டிருந்தபோது
சௌகரியத்திற்காய்
மருத்துவமனைக்கு அடிக்கடி அணிந்து
டெட்டால் வாசனையை ஒளித்து வைத்திருக்கிறது

விடலைப் பருவக் காதலின்போது அப்பிக் கொண்ட
வாசனைத் திரவியத்தின் துளிகளை இன்றும்
சேமித்து வைத்திருக்கின்றது
பல நாட்களில் அவமானத்தின் கண்ணீரினை
என் வெள்ளை நிறச் சுடிதாரின் சால்வை
துடைத்திருக்கிறது

கழுத்தின் வெள்ளைநிற முத்துமாலை அணிந்து
ஒரு புத்தாண்டில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தில்
அழகிய நினைவாய் தங்கியிருக்கிறது

வளர் இளம் பருவம் முதல்
நான் சுதந்திர தனி மனிதியாய் ஆகிய
இன்று வரை
என்னுடன் பயணித்துக் கொண்டிருக்கிறது
நைந்தும் கிழிந்தும் போகாத
வலிமையான நூலிழைகள் கொண்டு இழைத்த
என் ஆன்மாவின் பிரதிபலிப்பான என்
வெள்ளை நிறச் சுடிதார். 

துன்பவியலுக்கு பழகிக்கொள்ளுதல்

தறியில் இழையப்படும்
ஒவ்வொரு நூலாய்
மூளையின் வலி உணரும் நரம்புகளால்
இழையப்படுகிறது
துன்பவியலுக்கு பழகிக் கொள்கிற
ஒவ்வொரு நாட்களும்

வான் இடிச் சத்தத்தினையும்
விடம் பொருந்திய பாம்பினையும்
மென் புன்னைகையுடன் கடந்து போகக்
கற்றுக் கொள்கிறேன்
அந்நாட்களில்

என் அறிவாளித்தனங்கள் ஒவ்வொன்றும்
அற்பமாகிப் போகின்றன
ஒவ்வொரு இரவிலும்
நெருப்புக் குழம்புகள் பீறிடும் எரிமலைகளை
மனதின் உள்ளேயே பக்குவமாய்
பண்படுத்திக் கொள்கிறேன்

துன்பவியலுக்கு முழுவதுமாய் பழகிவிட்ட ஒரு
நன்னாளில் துயரக் குறிப்புகள் கொண்டு ஒரு
வயலினை வாசிக்கக் கற்றுத் தேர்ந்தவளாகின்றேன்
முகத்தில் எந்த சலனமுமின்றி
உங்கள் தைரியக்காரி
பட்டத்தை சூடியவாறு.

கோடைமழை

வண்டியினுள் இருக்கும்
ஐஸோடு
ஐஸ் வண்டிக்காரணின்
ஒரு நாள் பிழைப்பையும்
சேர்த்துக் கரைத்தது
கோடை மழை 

புன்னகை

மகளின் புன்னகையை
சட்டை செய்யாமல்
செல்கிறது
தந்தையின் மகிழுந்து
மனமகிழ் மன்றத்திற்கு

- பிரியங்கா

Pin It