யாரையும் காண முடியவில்லை

கண்டுணர முடியாத பள்ளங்களில்
இறங்கிக் கொண்டிருக்கிறது
நம்பிக்கை

காப்பாற்றும் கைகளா
கரை சேர்க்கும் அலையா
காது தவித்து
கண் பூத்து
திறந்து கொள்ளும் வழி
என்ன வழி

எங்குமிருக்கிற பாதைகள்
இறங்கி வரத் தயாராக இல்லாத சொற்களின்
மேல்
எத்தனை ஒப்பனை
எடுத்தாள முடியாத கைகளுக்கேன்
அதிகாரம்

அடைந்து கிடக்கும் இடத்திலென்ன
பாதுகாப்பு

நடுங்க
நடுங்கி
மறைந்துகொள்ள
காலமென்ற பெயருக்குள்
ஏன் ஒளிந்து கொள்கிறது
காத்திருப்பு

நடக்கச் சொல்லி
விழிக்கச் செய்யும் இருட்டின் மேல்
ஏன் இத்தனை பயம்

இடுவதாய் இல்லாத கட்டளையில்
மெளனம் ஊறி
காளான் பூக்கும் ஈரத்தில்
பெருகிக் கிடக்கிறது
யாருமற்ற நிழல்

போதுமானதாய் இல்லாதபோதும்
வெயில் திறந்து விடுகிற
வெளிச்சத்திலே
விழுந்து முளைக்கிறது
மறுக்கப்பட்ட பிம்பத்தின் மற்றொரு பிம்பம்

- ரேவா

Pin It