எதையும் சொல்லத் தயங்காத நெருக்கம்
சொல்லும்படி விட்டுச் செல்லும்
அளவை
நூல் பிடித்துப் பார்க்கிறது
பழக்கம்

பழகிப்
பழகி
அழியும் எழுத்தை
யூகமென்று எண்ணும் மனது
அசைத்துப் பார்க்கிறது சமன்களின்
கண்ணாடி வழி

அதில்
சொல்லப்பட்ட நானென்பது
ஒட்ட மறுக்கிற என் பிம்பம்

காலத்தின் ரசம் தேய
சொல் நிதானிக்கிற பிரதிபலிப்பில்
கொஞ்சமாய் ஒட்டியிருக்கிற
பிம்பம்
நழுவி உடைகிறது
உள் நெருக்கத்தின் அளவாக

அனலாடி
காற்றின் இருப்பில்
நீர்க்கோடுகளை விட்டுச் சென்றிருக்கிற வெறுமை
அறைக்குத் திரும்பும் மனதை
அசைத்துப் பார்த்தல்
பொது விதி

வழங்கொழிந்து விட்ட சம்பிரதாயமாகவேணும்
நிகழா புன்னகையை
காற்று கொத்துகிறது
மட்கி அழியா நெகிழியின் விளைவென

நூல் அளவை
உயரமாக்கிப் பறக்கிறது
காற்று பிம்பம்
சொல் முனைக்கும் தூரமாக

- ரேவா

Pin It