ஆடிப்பட்டத்தின் அத்தனை காயையும் 
விதைத்து சுற்றிவரத்தக்க 
எங்கள் கொல்லையின் இல்லாமை
மா வாகத்தான் இருந்தது
ஊரைக்கூட்டும் மணங்கொண்ட முருங்கையைக் 
கட்டுகட்டாக
அள்ளிக்கொடுத்துவிட்டு
உதிர்ந்த நாலு மாம்பிஞ்சை
பதிலியாகப் பெற்றுக்கொள்ளும் 
மாப்பிரியை எங்கள் ஆத்தா
குட்டைக்கன்று ஒன்றை
வைத்த மறுவருடத்திலிருந்து
சுற்றிச்சுற்றி 
அண்ணாந்து பார்த்துக் கொண்டேயிருந்தாளாம்
எங்காவது ஒரு கொத்து
 பூ விட்டிருக்குமோ என்று
 
தோரணத் தொங்கலுக்குதான்
லாயக்கு
நாலு செருப்பைக்கட்டி தொங்கவிடு 
ரோஷத்தில் காய்க்கட்டும் 
அம்மாளுவின் ஆலோசனைக்கு 
கண்ட செருப்பெல்லாம் என்னோடு போகட்டும் 
என ஆத்தா விசிறிய வருடந்தான் 
உதிர்ந்ததாம் 
கொத்துப்பூ
 
- உமா மோகன்
Pin It