மழை வேண்டி யாகம் நடத்துகிறார்கள்
குழந்தை வேண்டி கடவுளிடம் செல்கிறார்கள்
ஓட்டு போட காசு வாங்குகிறார்கள்
மணல் அள்ளி பெரிய மனிதர்களாகிறார்கள்
ஆறிருந்த இடத்தில் பிளாட் கட்டுகிறார்கள்
கிடைக்கும்போதெல்லாம்
குழந்தைகளை வன்புணர்வு செய்கிறார்கள்
கமிஷனுக்கு பாலம் கட்டுகிறார்கள்
நீரை அந்நிய நாட்டுக்குத் தாரை வார்க்கிறார்கள்
நடிகனுக்கு பால் அபிஷேகம் செய்கிறார்கள்
தனித்த பெண் ஒருத்தி கிடைத்தால்
புளித்த தயிராக்கி விடுகிறார்கள்
சாமிக்கு சண்டையிடுகிறார்கள்
சாதிக்கு கொலையும் செய்கிறார்கள்
காதலுக்கு சமாதி காட்டுகிறார்கள்
தங்கச்சியையே விரட்டி விரட்டி வெட்டுகிறார்கள்
இவர்கள் எல்லாரும் தான் திரையரங்கில்
படம் போடுவதற்கு முன் எழுந்து நின்று
ஜன கண மண பாடுகிறார்கள்

- கவிஜி

Pin It