சுடற்கொடியோடு தனித்திருத்தல்
நடப்பதே இல்லை

முன்பொரு காலம்
என்ற கருப்பு வெள்ளை
கட்டத்துள் கலவி
காட்டுக் கத்து கத்துவது
குப்புறப்படுத்து வெறிக்கும்
நாள்பட்ட சுவடு

அறைகளற்ற கட்டடத்துக்கு
வீடு என்று பேர்

கூட்டுக்குடும்பம்
நாய்ப் பற்களில் குதறுவது
பெற்றதுகளுக்கும்
புரிவதில்லை
பெறப்பட்டதுகளுக்கும்
புரிதலில்லை

நகம் கடித்த கடைக்கண்
பார்வைக்கு அர்த்தம் மறந்த
சகிக்கு சமீபமாக
பெருங்குறட்டை தான் ஆறுதல்

அரிப்பெடுத்த மனதுக்கு
சொரிந்து விடும் இணை
இருந்தும் இல்லாமல்
தூக்கத்தில் கால் அகற்றி
வரக் வரக் என கீறிக் கொள்வது
வருத்தங்களில் மேலானது

கொஞ்சநாட்களுக்கு முன்பு கூட
வார இறுதி
வசதி செய்து கொடுத்து

இப்போதெல்லாம் வெட்கம்
மானம் பாராமல்
குளியலறையில் நேரம்
எடுத்துக் கொள்ளும்
சம்சாரியின் சல்லித்தனம்
40க்கு மேல் பொதுவானது....!

- கவிஜி

Pin It