கங்கு ஒன்றுக்கு
தேடியலைந்து கொண்டிருந்தேன்.
மெல்லப் புகைந்து புகைந்து
வான்நோக்கித் தன்நீள் நாக்கை நீட்டுமென

கங்குகளோடு சில கங்குகளையும் சேர்த்து
கங்குகள் போன்ற எழுத்துக்களை
சொற்கூட்டங்களாக உருவாக்கி வைத்தேன்.

கங்குகளைக் கூட்டிச் சேர்த்து
தீயின் நாக்குகள் போன்ற வரிகளைக் கொண்டு
என் சமூகத்தின் தீமைக்கெதிர் வளர்ப்பேன்.

அப்போது
அழகிய வனத்தில்
வீணாய் முளைத்த
வருண நச்சுக்கள் எரிதழலில் வெந்தே போகும்.

மனிதமெனும் நல் விதையூன்றி
சமூகக் காடெல்லாம் நல்மணம் பரப்பும்
பூக்கள் பூக்கும் அங்கு.

சுதந்திரப் பறவைகள் தங்களின் அலகுகளால்
தானியங்களை கொத்தித் தின்னும்
அதை
நான் அழகுற ஓவியமாய் எழுத்துக்களால்
தீட்டிக் கொண்டிருப்பேன்.

- இல.பிரகாசம்

Pin It