உலகின் உன்னதமென்று
நான் கருதிய அது
கிட்டியது
மிகவும் காலம்தாழ்ந்து

தலைக்குப் பின்னே
ஒளி வட்டம் தெரிவதாய்
நண்பர்களுக்குள் பேச்சு

நிமிர்ந்த நடையும்
நேர்த்தியான உடையுமாய்
நிலைத்த புன்னகையுடன்
உலவ ஆரம்பித்தேன்

களிமயக்க விழிகளுடன்
மென்மையான சொற்களுடன்
அனைத்தின் மீதும் பிரியமாய்
இருக்கத் தொடங்கினேன்

சில நாட்களில்
உன்னதத்தின் ஊஞ்சல்
இப்பக்கமிருந்து நகர்ந்தது
எதிர் திசைக்கு

உலகின் ஒட்டுமொத்த
பரிதவிப்பையும்
எனக்குள் செலுத்திக்
காட்டியது
துயரின் கரும்பச்சை ஆழத்தை

மெல்லிய மறுப்புடன்
கையை விரித்தால் போதும்
பறந்து கலந்திடும் காற்றோடு
துயரும் தவிப்பும்

விரிக்கக் கெஞ்சுகிறது
உள்ளொடுங்கிய உயிர்...
விரிக்க விடாமல் தடுத்தபடியேயிருக்கிறது
கருநீல ஆழத்திலிருக்கும் ஏதோவொன்று

- கா.சிவா

Pin It