பல நூறாயிரம் நூற்றாண்டுகள்
கடந்து வந்து விட்டார்கள்.
மனிதர்கள்.

அவர்கள்
கொஞ்சி விளையாடவும்
கொன்று புசிக்கவும்
விலங்குகளின் மேலும்
பறவைகளின் மேலும்
கருணை கொண்டனர்.

ஆறாம் அறிவென்று
சிலாகித்துக் கொண்டு
அனேகமானவற்றைப் படைத்தான்.

காடுகளை வெட்டியும்
மலைகளைக் குடைந்தும்
வீடுகளையும் நகரங்களையும்
உண்டாக்கினான்
வேட்டையாடினான்
வேளாண்மை செய்தான்
வேலை பார்த்தான்
வேவு பார்த்தான்
கூடி வாழ்ந்தான்
குடும்பமானான்
காதல் கவிதை இலக்கியம் லேகியமென
அனைத்தும் கொண்டான்

மொழி கொண்டான் -அதன் மேல்
மோகம் கொண்டான்
வெறி கொண்டான்
தேசம் செய்தான்
வேட்கை கொண்டான்
போதாமை கொண்டான்
யுத்தம் செய்தான் -பின்
மண்டை ஓடுகளின் மேலே
சாம்ராஜ்யம் கட்டினான்

சாம்ராஜ்யத்தின் மேலே நின்று
சமாதானம் குறித்துப் பேசியபடியே
அமைதிக்கான யுத்தம் என்று
தந்திரம் சொல்வான்

ஹிட்லரையும் புத்தனையும்
பாரதியையும் ஆறுமுகநாவலரையும்
அன்னை திரேசாவையும் ராமானுஜரையும்
மார்க்ஸையும் முசோலினியையும்
உருவாக்கிய மனிதர்
ஜோர்ஜ் புஷ்ஷையும்
ஓசாமா பின்லேடனையும்
வேறுபடுத்திக் காண்பர்.
மகிழ்வர் சமாதானம் கொள்வர்.

யுத்தங்களையும் சமாதானத்தையும்
பற்றி பேசிக்கொண்டிருப்பர்.

ஒழுங்கில்லாத உலகில்
நிரல்களாக ஒழுங்குகளை உருவாக்குவர்
அழகில்லாமல்
ஒழுங்கில்லாமல் இருத்தல் என்பதே
ஓரழகு என்பதை மறந்து.

இரவில் அழும் பிள்ளைக்கு
பால் கொடுக்க மறந்து
தூங்கும் தாய் போல
தாயை தடவிக் கொடுக்காமல்
தூங்கும் தந்தையைப் போல
மனிதன் படைத்த கடவுள்
தூங்கிக் கிடக்கிறார்.

- புருஷோத்

Pin It