எப்போதாவது பேசிக் கொள்வோம்  
பார்த்துக் கொள்வதும் உண்டு  
இப்போதும் சில மறைத்தல்கள் இருக்கிறது 
வாய்வரை வந்த வார்த்தைகளை  
எத்தனையோ முறை அடக்கியதுமுண்டு   
ஒன்றாக தங்கும் சூழ்நிலை கூட வந்திருக்கிறது 
ஒரே பைக்கில் சில போது பயணம் 
சாத்தியப்படுவது நல்ல புரிதல்தான் 
பின்னிரவு குறுஞ்செய்திகள்
கவிதை சேர்ந்திருப்பது ரசனைதான் 
புளி சோறு செய்யும் நாளில் எப்படியோ 
வந்து சேரும் டிபன் பாக்சில் எதுவோ கமகமக்கும் 
காடு மலை என்று சுற்றிய புகைப்
படங்களுக்கு லைக்ஸுடன் பகிர்தலும் நடக்கும் 
முல்லை பூ வைக்கும் நாளில் 
ரசத்துக்கு சர்க்கரைக்கு வேறெதற்காகவாவது 
ஒரு முறை வீடு வந்து போவது அரசல் புரசல்தான் 
அடுத்தடுத்த பக்கங்கள் பூக்களால் 
நிறைந்திருக்கிறது அவள் படித்த புத்தகம்  
சரி சரி இன்னும் என்ன சொல்ல வேண்டும் 
என எதிர் பார்க்கிறீர்கள் 
எதிர் வீட்டு முதிர்கன்னி பற்றி....!
 
- கவிஜி
Pin It