ஒரு பக்கம் பாட்டி சோறூட்ட 
மறு பக்கம் தாத்தா மிச்சர் வாங்கி 
வெச்சிருப்பார் 
சித்தி கூட பாட்டு படிக்கும் 
சித்தப்பா போட்டோ பிடிப்பார் 
அம்மா பாத்திரம் விலக்கிட்டே  
பெருமை பூக்கும் என் பிள்ளைன்னு 
கிராமத்துல பஞ்சம் மாதிரி  
பக்கத்து வீட்டுலெல்லாம் 
மூணு நாலு பிள்ளைங்க 
எங்க வீட்டுல மட்டும் நான் 
ஒத்த பிள்ளை 
அது ஒரு ஊர்ல ஒரு ராஜா 
இருந்த மாதிரி 
ஊருல இருந்து வரும் போதெல்லாம் 
பை நிறைய இனிப்பு தான் 
அதுதான் அப்பாவும்
மாமா சொன்ன 
கதைங்கெல்லாம்தான் 
என் கதையா இப்போ நீங்க படிக்கறது
அத்த வீட்டு கொய்யா மரம் தான் 
என் கனவுக்குள்ள காய்க்கிறது 
அது எல்லாம் ஒரு காலம் 
அது எல்லாம் ஒரு வாழ்க்கை 
இப்போ பசிச்சா தேடி வாங்கி தின்னுக்கனும் 
பாட்டு கேக்க யூ டியூப் இருக்கு 
மிக்சருக்கு மிக்சிங் எப்பவும் சரக்குதான் 
பாட்டி தாத்தா செத்தாச்சு
சித்தி சித்தப்பா அத்தாச்சு 
மாமா மாயக் கதையா மறைஞ்சிட்டாரு  
காசு குடுக்காத எழுத்துல 
பெருமை இல்லை அம்மாவுக்கு 
இனிப்பு வாங்கிட்டு வந்தாலும் 
கசக்கும் பார்வைதான் அப்பாவுக்கு 
என்னமோ தோணுது 
பக்கத்துக்கு வீட்லயே பொறந்திருக்கலாம்...!
 
- கவிஜி
Pin It