காலடி சப்தங்களில்
குட்டி வர்றான் துரை வர்றான்
ரோஸி வருது சுருளி வருது
மேல் வீட்டு சின்னப்பன் வர்றான்
என சொன்ன அம்மாவுக்குத் தான்
இன்று யார் வந்ததும் தெரியவில்லை

வீடு முழுக்க மின்சாரம் இல்லாத
நள்ளிரவிலும் தன் அறைக்கு
மெழுகுவர்த்தி ஏற்றிக் கொள்ளாத
அம்மாவை சுற்றி இன்று அத்தனை
மெழுகுவர்த்திகள்

அந்நிய பாஷை எல்லாம் பேசும்
அம்மாவுக்கு
இன்று யாரின் மொழியும் புரியவில்லை
மூடி இருந்த விழிகளில் திறந்தேதான்
கிடந்தது வீடு

ஒரு போதும் பூட்டாத வீடு
இனி பூட்டும் போதெல்லாம்
அம்மா வெளியேறித்தான் இருப்பார்

பார்வை அற்ற இப்பெரும் மரணத்துக்கு
உருகி சாகும் சாட்சி
நானாகவே இருந்து விட்டு போகிறேன்
மீசையற்று

அழுதாலும் தீராத அன்னைக்கு
எழுதினாலும் தீராத என்னை வைத்து
ஒன்றுமேயில்லை
எரிகிறது என் எலும்புகளில் அவர்
காணா மெழுகுவர்த்திகள்....!

- கவிஜி

Pin It