வந்து நின்ற
பேருந்தில் ஏற
முண்டியடித்த கூட்டத்தில்
பின்பக்கமாய் ஒருவன்
அவளின் உடலோடு ஒட்டி
பிருஷ்டத்தை அழுத்தி
முன்னோக்கித் தள்ள
வாசலருகில் வலமிருந்து இடமாய்
கம்பியைப் பிடிக்கும் சாக்கில்
மார்புகளை நிதானமாய்
அழுந்தத் தடவித்
தாண்டிச் செல்கிறது
ஒரு முரட்டுக் கரம்.

இன்னும் இன்னும் பல
ஒட்டல்கள் உரசல்கள்
தடவல்கள் கடந்து
உள்ளே வந்தவள்
முன்னதாகவே ஏறி
ஜன்னலோர இருக்கை கிட்டிய
சந்தோஷத்தில் அமர்ந்திருந்தவனிடம்
முகம் முழுக்கக்
கடுமை பூசி கறார் தொனியில்
மாறி உட்கார வாதிடுகிறாள்,
வேற்று ஆணோடு சேர்ந்தமர்தல்
பண்பும் மரபுமன்று என்பதனால்..!

- ஆதியோகி

Pin It