அந்தக் கேள்வி
அவனைக் கட்டிப்போட்டுவிட்டது

அந்தக் கணம்
அவன் சுயத்தை முன்நிறுத்திப்
பொய் சொல்ல வைத்தது

தமிழிலும் ஆங்கிலத்தில்
அவன் வாசித்த
பெரிய புத்தக வரிசை
அவனுள் சரிந்து விழுந்தது
அந்த வெற்றுத் தளத்தில்
அவன் வாசிப்பு அனுபவங்கள்
அவனைவிட்டு விலகின

பொய்யின் பெருந் துணையால்
அவன்
அந்தச் சூழலின் கடும் இறுக்கத்தை
உடைத்துப் போட்டு வெளியே வந்தான்

கேள்வி கேட்டவனை
அந்தப் பொய்
உள்ளிழுத்து விழுங்கியது

அழகான உடையணிந்த பொய்கள்
சில நேரங்களில் பலருக்கும்
வசதியாகத்தான் இருக்கிறது!

- ஸ்ரீரங்கம் சௌரிராஜன்

Pin It