வீதியின் இரு பக்கமிருந்தும் வருவாள்
அவள் வருவதெற்கென்றே
இன்னொரு பக்கத்தையும்
கொண்டிருக்கும் வீதி...

பூனைக்குட்டிகளை
சுமந்து வருகிறாளோ
எனப் பா............ர்க்கையில்
வீதி முழுக்க சுவராகி நீள்வாள்...

கண்கள் பத்தாது என்பேன்
கவுனும் பத்தாது என்பாள்....

தலை வலித்த நாளில்
நள்ளிரவில் தைலமாவாள்
படக்கென்று வீதி புரண்டு படுக்கையில்
வாய்பொத்தி அரும்பி மீசை இழுப்பாள்...

தயிரும் பழையதும்
சாப்பிட்டுக் கொண்டிருக்கையில்
அவள் வீடு கடக்க நேரிடும்
ஒரு வாய் என ஊட்டுவாள்
அவள் வாயும் அப்போது கூட்டுவாள்...

மழை நாளில் குடை கொண்டு
ஓடி வருவாள்
வெயில் தாங்காதென்கையில்
தாவணி தலைக்கு மேல் தூக்குவாள்...

புத்தம் புது மலரே என் ஆசை சொல்லவா
என காதில் கிசுகிசுப்பாள்
'என் "மயில" பார்த்திங்களா' என்று
ஊரு முழுக்க தம்பட்டம் அடிப்பாள்...

இப்ப என்ன முத்தம் தான
என சித்ரா வீட்டு சந்தில்
நாளுக்கொன்றும் சில போது
நாளெல்லாம் நின்றும் கொடுப்பாள்...

ஓர் அடர் வினை நாளில்
அத்திப்பூ உதிர நான்
யுத்தப்பூ அதிர ஊர்விட்டு வெளியேறிய போது
பித்து பிடித்த கடவுளென
வீதியின் எப்பக்கமிருந்தும் வந்தாள்...

* 20 வருடங்களுக்கு பின் கவிதை தொடர்கிறது

யாரோவென பார்த்து விட்டு
யாரோவாகவே அமர்ந்திருக்கும்
அவளை பத்து நிமிடங்களுக்கு மேல்
பார்க்க முடியாமல்
தலை தெறிக்க ஓடி வருகிறேன்
என் வழி முழுக்க
எல்லா பக்கமிருந்தும்
அவள் வந்து கொண்டேயிருக்கிறாள்.....

- கவிஜி

Pin It