விழுந்து கொண்டிருக்கின்றன மனக்குளத்தில்
தொடர்ந்து மழையெனக் கற்கள்
சருகுகள் விழுந்து இசை எழுப்புகின்றன
மீன் கொத்திச் செல்வதாய்
ஆழப் புகுகிறது கொக்கின் அலகு
திடீரெனக் குதித்து வெளியேறுகிறது தவளை
பாம்புகள் மீன்கள் குளமெங்கும் ஊர்திகளாய் ஊர்கின்றன
நீர் எடுப்பவர்கள் எந்தக் கவனிப்புமின்றி நீரெடுத்துப் போகிறார்கள்
எல்லாக் குளங்களும் தாமரை பூத்த தடாகமாகிவிடுவதில்லை.

- இரா.இராகுலன்

Pin It