கொஞ்சம் தூக்கிய மாதிரி மூக்கு... மேல் உதடு கொஞ்சம் பெருசு. சொல்லி வெச்ச மாதிரி மூக்குத்தி. சின்ன நெத்தி. மாநிறம். சிவப்பு சாயத்தில் இதழ்கள் சொட்டும் செர்ரி வரிகள். தேவதையா என்று தெரியாது. டபக் டபக் என்று பார்க்கும் பார்வையில் கொஞ்சம் தடுமாறும் எனது காலை பொழுதுகள். அவளின் நடை கூட அப்படித்தான். கண்கள் சிமிட்டுவது போல தான் படக் படக் என்று நடக்கும். ஒரு பக்கம் மட்டுமே மறைக்கும் சால். மறுபக்கம் முறைக்கும் தாழ்.

தினம் ஒரு வண்ணம் ஆகும் தருணம் அந்த பூக்கடை தாண்டி வளையும் ஆவாரம் பாளையம் சந்தில் எனக்கு கிடைக்கும். சரியாக 8.45 லிருந்து 8.55 க்குள் நானும் அவளும் சந்தித்துக் கொள்வோம். தூரத்திலேயே பார்த்து விடுவாள். பக்கம் வந்து என்னைக் கடந்து போகும் வரை பார்வை பூக்கும். மணக்கும். படரும். உதிரும். பறக்கும். நான் மெல்ல மெல்ல வண்டியை உருட்டி செல்வேன். விட்டால் இறங்கி தள்ளிக் கொண்டு கூட செல்லலாம் போல தோன்றும். எப்போதும் புன்னகை தவழும் முகம். அப்போது தான் யாருக்கோ சிரிப்பை தந்தவள் போலவே இருக்கும் நீள் வட்ட முகத்தில்... ஆயிரம் முத்தங்கள் தந்தாலும் போதாது. அடுத்த நாளும் சேர்ந்து கொண்டு அவளைக் காணும் என்று வாய்விட்டே புலம்பிக் கொண்டு செல்வேன்.

நாட்கள் நீளுதே...

பின்னொரு நாளில்..... உடம்பு சரி இல்லை என்று நான் மதியம்தான் அலுவலகம் சென்றேன். என்ன ஆச்சரியம். அசரீரி சொல்லியதோ.... ஆழ்மனம் துள்ளியதோ அவளும் அதே நேரத்தில் அதே இடத்தில் வழக்கம் போல நடந்து வந்தாள். எங்களுக்குள் ஏதோ இருக்கிறது என்று நம்பத் தொடங்கினேன். அவளின் முகத்தில் அதே புன்னகை. அதே டபக் டபக். படக் படக். கரை தாண்டிய புயலெல்லாம் திரை தாண்டும் காட்சியென எனக்குள் சுழல துவங்கியது. காதலா காமமா தெரியாது. அவள் வாசம் வேண்டும். குறைந்த பட்சம் அவள் பேராவது வேண்டும்.

அவளாடையில் நீல நிறம் ... சிவப்பு நிறம்... ஆரஞ்சு நிறம்... ஊதா நிறம்...கருப்பு நிறம்... வெள்ளை நிறம்...கூட புதிதாக முளைத்த அவள் நிறம்...பித்து பிடிக்கலாம் தவறில்லை... செத்தும் பிழைக்கலாம்.... தவறேயில்லை.

பின்னொரு மாலையில் அந்த வழியாக செல்ல நேரிட்டது.

"ச்சே நம்ம அழகி இப்போ வந்தா நல்லா இருக்கும்ல" என்று ஒரு முறை முனங்கிக் கொண்டு பார்க்கிறேன்...

பாவி வந்து கொண்டிருக்கிறாள்.

கடவுள் இருக்கான் சோழவர்மா.... அட்லீஸ்ட் இந்தக் கதையிலாவது கடவுள் இருக்கான்... எனக்கு சிரிக்க வேண்டும் போல இருந்தது. பயங்கர ஆச்சர்யமாகவும் இருந்தது. இ எஸ் பி யா.... எண்ணங்களின் கூட்டு முயற்சியா....கடவுளின் ஆப்பிள் நாடகமா... என்னமோ போ.... அவள் வருகிறாள்.... நான் கண்களை குழந்தையை பார்த்து சிமிட்டுவது போல அழுத்தி ஆழமாக சிமிட்டி சென்றேன். அதே மோனோலிஸா புன்னகை.

எனக்கு அன்று இரவு தூக்கம் வரவில்லை. உள்மனம் புரண்டு கொண்டே இருந்தது. இனியும் காலம் தாழ்த்த கூடாது. நாளையே காதலோ காமமோ சொல்லி விட வேண்டும். மோனோலிசா என்று ஒருமுறையேனும் வாய்விட்டு அழைத்து விட வேண்டும். நான் தயாரானேன். ஒரு நாளை விடிய வைக்க எத்தனை போராட வேண்டி இருக்கிறது. சூரியன் கூட தாமதம். நான் ஆகமம்.

சென்றேன். அந்த பூக்கடைக்கு எதிரே இருந்த டீ கடையில் நல்லவன் போல நின்று கொண்டேன். கூட்டம் முன்னும் பின்னும் போவதும் வருவதுமாக இருந்தது. காலை வெய்யில் என்னிறமோ அந்நிறத்தில்... அந்த இடம் முளைத்துக் கொண்டிருந்தது.

நான் டீ குடித்துக் கொண்டே எட்டிப்பார்த்தேன். மோனாலிசா வந்து கொண்டிருந்தாள். கூட்டம் விலக்கிய சுடர் என அவளின் நடை புது பூவென பூத்துக் கொண்டிருந்தது. நான் மெய்ம்மறந்து நின்று விட்டேன். அவள் அதே புன்னகையில் அந்த சந்துக்குள் நடந்து கடந்து மறைந்து விட்டாள். கழுத்து திரும்பி அய்யயோ அவள் போய் விட்டாலே, பேசாம விட்டுட்டோமே என்று மனதுக்குள் புலம்பிக் கொண்டே முன்னால் திரும்ப திக்கென்று ஆனது காட்சி. உள்ளுக்குள் படுவேகமாக துடித்தது இதயம். அதே இடத்தில அவள் மீண்டும் நடந்து வந்து கொண்டிருந்தாள். நான் திகைத்த கண்களோடு பார்த்துக் கொண்டே நின்றேன். அவள் அதே புன்னகையோடு அந்த சந்துக்குள் சென்று மறைந்து விட்டாள். பெருமூச்சை அடக்கியபடி பயந்து கொண்டே மீண்டும் முன்னால் பார்த்தேன். அதே இடத்தில் மீண்டும் பட்டென்று முளைத்து நடந்து வந்து கொண்டிருந்தாள்.

நான் நடுங்கும் உடலோடு செய்வதறியாது சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டே நின்றேன். அந்த கடையில் டீ போடும் பையன் என்னை பார்த்து புன்னகைப்பது போல இருந்தது.

அவள் நடந்து கொண்டே இருந்தாள்... எப்போதும்.... இதோ....இப்போதும். இப்போது அங்கே காற்றில்லாதது போல உணர்ந்தேன்.

- கவிஜி

Pin It