உயிர் ஓயும் வலிதாங்கி.....
அம்மா அம்மாவென தன்னந்தனியே
துடிதுடித்தழுகிறேன்.......
பிரசவ வலியறியா எனதுடலை
தலைகீழாய் தூக்கிப்பிடித்தபடி
நிலைகலங்கி வீழ்கிறேன்.......
நெஞ்சம் முழுக்க அச்சம் வியாபிக்க
நொடிப்பொழுதில் பிறந்துவிடுமென
ஆசுவாசம் கொள்ளுமென் மனது.......
உடனழைத்துச் செல்ல
யாருமில்லை
சாதியற்ற கருவை சுமப்பதினால்.......
நடக்க நடக்க சோர்வில் சாயுமென்தேகம்
சட்டென நெடிய வலியுணரும்.........
கருப்பை வாய்பிளந்து ரணம் கிளறகிளற
வானம் இடிய ஓலமிட்டவளாய்
அங்குமிங்கும் படுக்கையில்
சுழன்றடித்திருப்பேன்.........
சிறுநீறும் இரத்தமும்
உடைகளை நனைத்துக்கலைக்க
மல்லாந்து விழித்திருக்கும் என்
கால்களுக்கிடையில் லேசாய்
எட்டிப்பார்க்கும் தலை........
வெளிவரத்தோதாய் கிழித்துவிடப்பட்ட
யோனிவழியே கைவைத்திழுக்க
இரத்தம் தோய்ந்த மேனியாய்
பதறியழும் உயிர்த்த சிசுவொன்று....

- வழக்கறிஞர் நீதிமலர்

Pin It