துளியும் வாசமில்லா மலர்தான் அது.
ஆனாலும்
சிறுவயதில் ரெட்டை ஜடை பின்னி
சிவப்பு முடிச்சிட்டுக் கட்டிய
ரிப்பன் பூவுக்கு அருகில்தான்
அந்த அடர் இளஞ்சிவப்பு வாடாமல்லியையும்
மயிரூசி செருகி
அழகு பார்ப்பாள் அம்மா.
கைவிரல்களைப்
பொட்டு நாளத்தில் சொடுக்கி
கன்ன முத்தமிட்டு
பள்ளிக்கு அனுப்புவாள்.
மற்ற நாள்களை விடவும்
எனக்கு நானே
சற்று கூடுதல் நிறமாய்த் தெரிவேன் அன்று மட்டும்.

காலநகர்வில்
நானும் அம்மாவாய்....
பிஞ்சுவிரல் , குட்டைமுடி மழலையுடன் வகுப்பறையுள் நுழைகையில்
அவள் சிநேகிதி ஒருத்தியின் பட்டாம்பூச்சி ரிப்பனில்
செறிவாய்ப் பொதிந்திருந்த
அவ் வாடாப்பூவின் வண்ணச் சாயலில்
சுவைமிகு என் பால்யத்தை
கறந்தபாலாய் மீட்டெடுத்தேன்
மீச்சிறு நொடியொன்றில்.

- வான்மதி செந்தில்வாணன்

Pin It