சீக்கிரம் உடம்ப குறைக்கறேன்
என்கிறாய்
சற்று நேரத்துக்கு உன்னுடல்
சுமக்கிறேன்

எதுக்கு குறைக்கணும்
முணுமுணுத்து சிரிக்கிறேன்
எதுக்கும் குறைக்கணும்
கலகலத்து சிரிக்கிறாய்

அதே இடம் அதே நேரம் அதே காதல்
நீ மட்டும் புதிது
பார்த்த நான் கூட வேறு

எதிர்ப்படும் வண்டியெல்லாம்
இசைக்கிறதோ
நினைப்புக்கு உன் சிரிப்பு
நினைக்க நினைக்க
இசை கோர்ப்பு

திரும்பு மாமா என்கிறாய்
கரும்பு சாறு செவியில்
முதுகு சாய்ந்து கொள்கிறாய்
திரும்பும் இதயம் நொடியில்

தாபம் தலைக்கேற
பின்கழுத்தில் உன் மூச்சு
சாபம் இவ்வுலகம்
திரும்பும் திசையெல்லாம்
லைட் போட்டு வெச்சிருக்கு

அந்தக்கதை செம
கொல்லுதுடா என்கிறாய்
இந்தக்கதை நல்லாருக்கே
அள்ளுதுடி என்கிறேன்

வயிறோடு வளையும்
கையில் கொஞ்சம் சூடு
கொஞ்சம் குளிரு
உன்னோடு வளையும் சாலையில்
கொஞ்சம் தேனீர்
கொஞ்சம் கவிதை

மூங்கில் காடு யானை மனது
கண்கள் தேட யாவும் நாமே
கையில் கிள்ளினாய்
பேருந்து நிற்கிறது

கனவை அனுப்பி விட்டு
காற்றில் முத்தமிடுகிறாய்
கவனம் புள்ளியாக என் இருத்தல்
தூரம் போகிறது

இனி

ஆரஞ்சு முட்டாய் இனிப்பு
வீடு வரைக்கும்
ஆந்தை முழி யோசனை
அடுத்து பாக்குற வரைக்கும்....!

- கவிஜி

Pin It