பழுத்த இலையொன்று
பழுதின்றி
விழுதலைப் போல்
விலகிக் கொள்!

வெகு தூரத்து
பயணித்த பறவையொன்றின்
படபடக்கும் இறக்கையிலிருந்து
உதிரும் வலியற்ற
சிறகைப் போல
விலகிக் கொள்!

மனம் நிறை
மகிழ் தருணமொன்றில்
விழி வழி நீர்
கனமின்றி
வழிவதைப் போல்
விலகிக் கொள்!

கையணைப்பில்
அசந்துறங்கும்
குழந்தையொன்றின்
உறக்கம் விலக்கா
கையுறுவுதல் போல்
விலகிக் கொள்!

பாய்ப்புண் பற்றி
படுக்கையில் விழுந்து
நோய்மையின் வாசம்
நாசி துளைக்காது
படுத்தவுடன்
பிரிந்த உயிரைப் போல்
விலகிக் கொள்!

விலகிக் கொள்
அல்லது
விலகிக் கொல்!

- இசைமலர்

Pin It