பஞ்சாலையில் பணிபுரியும்
அவள் மேனி முழுதும்
வெண்மேகமென
படர்ந்திருந்தது வெண்பஞ்சு.

பேருந்துவிட்டு இறங்குகையில்
உதிரிகளாய் சிதறிக் கிடந்தன
சில மேகத்துண்டுகள் ஆங்காங்கே.

வீடடைந்தவள் இடியென
அறைக்கதவைத் தாழிட்டபின்
அத்தனை நேரமும் பொறுமை காத்த அவள் விழிகள்
நிச்சயம் பொழிந்திருக்க வேண்டும்
அவளுக்கான பெருமழை ஒன்றினை.

- வான்மதி செந்தில்வாணன்

Pin It