பூட்டப்பட்டுவிட்ட இரும்புக் கதவு

அதன் கம்பிகளின் ஊடாக

ஒரு அடி சொச்சத்துக்கு நீள்கிறது

குழல் விளக்கின் வெளிச்சம்

இந்தச் சின்னஞ்சிறிய

வெளிச்சத் தீவுக்குள்தான்

அன்றாடம் நடக்கிறது இரவு வாசிப்பு

ஒரு அடிக்கு இரண்டரையடி வெளிச்சப் பரப்பிற்குள்

புத்தகத்தை சரியான இடத்தில் கிடத்தி

இடது பக்க நிலைச் சுவற்றில்

உடல் சாய்த்துக் கொண்டு படிப்பது

நிச்சயமாய் சுகமான அனுபவமல்ல

சுவற்றுக்கு அணை கொடுத்திருந்த

இடது தோள் மரத்துப் போகையில்

வெளிச்ச விளிம்பில் போர்வை மேடை அமைத்து

அதில் நெஞ்சை அழுத்திக்கொண்டு வாசிப்பது

உண்மையாகவே இம்சைதான்

நெஞ்சும் மரத்துப் போகையில்

இடது கையால் தலைதாங்கி

ஒருக்களித்து படிக்க வேண்டியிருக்கும்

மூக்கிலிருக்கும் வழுக்கிச் செல்லும்

கண்ணாடியைப் பிடிப்பதா

அல்லது

படிப்புச் சுதந்திரத்தில் தலையிடும்

கொசுக்களை அடிப்பதா

இக்குழப்பம் தீராமலே

வாசிப்பை தொடர வேண்டியிருக்கும்

2½ சதுர அடிக்குள்

உடல் குறுக்கி

உறுப்புகள் மரத்துப்போக

சுய வருத்தலாகத்தான் நடைபெறுகிறது

சிறை தனிக் கொட்டடியின் இந்த இரவு வாசிப்பு

…………. …………. ………….

இருந்தபோதும்

இங்கு… இது…

தனிமை நரகத்திலிருந்து எனை

மீட்டுச் செல்லும் ஞானப் படகாகவும்

வெறுமையின் வெற்றிடத்தை

இட்டு நிரப்பும் உயிர்க்காற்றாகவும்

தட்டுத் தடுமாறும் மனத்தின் பற்றுச் சுவராகவும்

அமைதியையும் உறக்கத்தையும்

கைப்பிடித்து அழைத்துவரும் அழகு தேவதையாகவும்

அல்லவா விளங்குகிறது

மேலும்

அடைக்கப்பட்டுள்ள ஹோமோ சேபியன் விலங்கு

இன்னும் மனிதனாய் நீடித்திருப்பதன்

ஒரு மெய் அடையாளமல்லவா இது

Pin It