எப்போதும்
வேகமாய் விடியும்
எனக்கிந்த
அமாவாசை மட்டும்

சாம்பாரும் உருளையும்
ஏதோவொரு பொரியலும்
பல்லுக்கு மசிவதுபோல
பறந்துபறந்து சமைத்து
ராகுகாலம் எமகண்டம்
முன்பாகவே முடித்து
பூசையறையில் அதிசயமாய்
அதிவிரைவில் விளக்கேற்றி
படையல் போட்டு
கற்பூரம் ஏற்றி முடித்து
அமர்ந்த நொடிகளில்

சீக்கிரம் கரையாதா
இக்கற்பூரம் என்று தோன்ற
கரைந்ததும் வேகவேகமாய்
சாதம் பிசைந்து
இலையில் இட்டு
மாடியில் வைத்து
ஒப்புக்கு இருகுரல்
காகத்தை அழைத்துவிட்டு
ஓடி வந்து காத்திருந்தேன்
'இதோ அம்மா என்றழைக்கும் இக்குரலுக்கு'

முதுமையின் முடிவில்
முதுகு வளைந்து
இனி சுருங்குவதற்கென்று
சொற்ப தோலுமில்லாமல்
வாரமுடியாமலோ என்னவோ
சடை சடையாய் முடி
கைகள் உதறிக்கொண்டு
கால்கள் வீக்கம் கண்டு
அழுக்கேறிய சட்டையுடன்
குரலில் மட்டும் தெளிவு
பூசணிக்காய்
வாங்கியாச்சாம்மா என்றதும்
குங்குமமும் கற்பூரத்தையும்
கொடுக்க ...

தூக்கமுடியாமல் தூக்கி
சுத்திப்போட்டதும்
அத்தருணத்திற்கே
காத்திருந்ததுபோல
தாத்தா வாங்க
சாப்பிட என்றதும்
தள்ளாடிக்கொண்டே
ஏறிவந்து வாசல் வெளியில் அமரப்போனவரை
உள்ள வந்து
உட்காருங்க தாத்தா
என்று இழுத்து அமரவைத்து
பொறுமையாகப் பரிமாறி
சுத்திப் போட்டதுக்கு
அம்பது ரூபாய்
பணம் கொடுத்ததும் தான்
நிறைவு பெற்றதென்
இன்றைய ஒட்டம்

இப்படியாகக் கழிகிறது
அமாவாசை தாத்தாவிற்கான
என் அமாவாசைப் பொழுதுகள்
காக்கா சாப்பிட்டுச்சாடி
அம்மாவின் குரலை
காதில் வாங்காதவளாய்......

- மு.கௌந்தி

Pin It